Published : 17 Nov 2018 03:16 PM
Last Updated : 17 Nov 2018 03:16 PM

திண்டுக்கல் மாவட்டத்தை உலுக்கி எடுத்த கஜா: கொடைக்கானல் முடங்கியது

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று கஜா புயலின் திடீர் தாக்குதலால் மக் களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரம் சாய்ந்ததில் ஒரு பெண் உட்பட 2 பேர் இறந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயல் பெரிய அளவில் தாக்கும் என்ற முன்னெச்சரிக்கை அறிவிப்பு இல்லாத நிலையில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. சாதாரண சாரல்தான் இருக்கும் என மக்கள் எண்ணினர். ஆனால், சிறிதுநேரத்தில் பலத்த காற்று வீசத் தொடங்கியது.

இதையடுத்து சுதாரித்த மாவட்ட நிர்வாகம் காலை 7 மணிக்கு மேல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்தது. இந்நிலையில், மிதமாக வீசத் தொடங்கிய காற்று பின்னர் பலத்த சூறாவளியாக மாறி திண்டுக்கல் மாவட்டத்தை சுழன்றடிக்கத் தொடங்கியது.

சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் கஜாவின் பாதிப்பு இருந்தது. பலத்த காற்றால் மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திண்டுக்கல், நத்தம், பழநி, கொடைக் கானல் மலைப் பகுதிகளில் பரவலாக அனைத்து சாலைகளிலும் ஆயிரக்கணக்கில் மரங்கள் சாய்ந்ததால், போக்குவரத்து முற் றிலும் முடங்கியது. திண்டுக்கல், கொடைக் கானலில் கார் மீது மரங்கள் விழுந்ததில் கார் சேதமடைந்தது. கொடைக்கானல் கல்லறைமேடு அருகே கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சென்ற கார் மீது மரம் விழுந்ததில் திருச்சூரை சேர்ந்த நீலிமா (25) என்ற பெண் உயிரிழந்தார். உடன் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.

கொடைக்கானல் மலைச்சாலை மச்சூர் என்ற இடத்தில் மரம் விழுந்ததால் அரசு பேருந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கொடைக்கானலில் மின்கம்பங்கள் அதிக எண்ணிக்கையில் சாய்ந்ததால், மின் விநியோகம் சீராக இரண்டு நாட்கள் ஆகும் நிலை உள்ளது.

நிலக்கோட்டை அருகே மணியக்கா ரன்பட்டி மற்றும் நத்தம் சாலையில் மரங்கள் சாய்ந்ததால், போக்குவரத்து பல மணி நேரம் நிறுத்தப்பட்டது. கொடைக்கானல் - பழநி மலைச் சாலையில் ஆனைகிரி சோலை என்ற இடத்தில், சாலையில் மண் சரிவு ஏற்பட்டது.

வடமதுரை அருகே மொடக்குபட்டியில் வீடுகள் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் காயமடைந்தனர். பழநியில் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. சிறுமலை பகுதியில் பலத்த மழையால் அடிவாரத்தில் உள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் சில மணி நேரங்களிலேயே நிரம்பின. கரந்தமலையில் உருவாகும் திருமணி முத்தாறில் 2008-ம் ஆண்டில் தண்ணீர் சென்றது. பத்து ஆண்டுகளுக்கு பின் கஜா புயலால் நேற்று ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் அதிசயமாக பார்த்துச் சென்றனர்.

கொடைரோடு - அம்பாத்துரை இடையே எஸ். புதுக்கோட்டையில் ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதில் திருநெல்வேலி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டது.

கஜா புயலால் பல இடங்களில் மக்காச் சோளம், நெல், வாழை பலத்த சேத மடைந்தன. பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு குளம், கண்மாய்கள் நிரம்பின.

மீட்புப்பணியில் வருவாய், உள்ளாட்சி, மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அலுவலர்கள் முழுவீச்சில் ஈடுபட்டனர். சாலையில் கிடந்த மரங்கள் அப்புறப்படுத்தி போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. மின் கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் நடக்கின் றன. கஜா புயலால் காலை 9 மணிக்கு தொடங்கிய காற்று பிற்பகல் 12 மணி வரை மாவட்டத்தையே உலுக்கிவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஓடைப்பட்டி வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் கருப்புச்சாமி (59). இவர் மழைக்கு மரத்தின் அடியில் ஒதுங்கியபோது மரம் சாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x