Published : 29 Nov 2018 05:52 PM
Last Updated : 29 Nov 2018 05:52 PM

சென்னை மாநகராட்சி தூங்குகிறதா?: இனி ஒவ்வொரு வழக்கிலும் ஆணையர் ஆஜராகவேண்டும்:  உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.

சென்னையில் மாநகராட்சி இயங்குகிறதா? தூங்குகிறதா? மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் பொறுப்புணர்வு வேண்டும். அரசையும், மாநகராட்சியையும் நாங்கள் நடத்த முடியாது என உயர் நீதிமன்ற  நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை வடபழனியில் பெருமாள் கோயில் தெருவில் கடந்த ஆண்டு மே மாதம் எட்டாம் தேதி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர் 8 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில்  விபத்துக்குள்ளான கட்டிடம் சட்ட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும் விதிமுறை மீறல்களை அதிகாரிகள் கண்டு கொள்ளாதது தான் இந்த விபத்திற்கு காரணம் என டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இந்த இழப்பீட்டு தொகையை பணியை செய்யாத அதிகாரிகளுடைய சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து வழங்க வேண்டுமெனவும் சட்டவிரோத விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவே நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றம் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? கட்டிடம் இடிக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பிய அமர்வு மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனை நேரில் ஆஜராக  உத்தரவிட்டது.

நேற்று ஆஜராகாததால் இன்று ஆஜராக உத்தரவிட்டு வழக்கை இன்று ஒத்திவைத்தனர். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகி இருந்தார். மேலும் கட்டிடம் இடிக்கப்பட்டது தொடர்பாகவும் அறிக்கையையும், அது தொடர்பான புகைப்பட ஆதாரங்களையும் நீதிமன்றத்தின் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள் இந்த அறிக்கையில் எந்தவிதமான விவரங்களும் முழுமையாக இல்லை.  அரைகுறையாக இருப்பதாக கண்டனம் தெரிவித்தனர். மேலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த விதமான நடவடிக்கைகளையும் மாநகராட்சி எடுக்கவில்லை எனவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் விபரங்கள் முழுமையாக இல்லாமைக்கு அரசு கூடுதல் வழக்கறிஞர் ராஜகோபால் வருத்தம் தெரிவித்தார்.

 திருத்தப்பட்ட புதிய விரிவான அறிக்கையினை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கோரினார். அப்போது நீதிபதிகள் கடந்த ஆண்டு மே மாதம் தீ விபத்து சம்பவம் நடைபெற்றதாகவும் ஆனால் தற்போது ஒன்றரை ஆண்டுகளாக எந்தவிதமான நடவடிக்கையையும் மாநகராட்சி எடுக்கவில்லை.

நீதிமன்றத்திற்கு வழக்கு வந்த பிறகு சம்பந்தப்பட்ட கட்டிடத்தை அதிகாரிகள் இடித்துள்ளீர்கள். ஏன் இந்த அவசரம், ஒன்றரை ஆண்டுகாலமாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள். என நீதிபதி கேள்வி எழுப்பினர்.

சென்னை மெரினா கடற்கரைக்கு  சென்று பாருங்கள் அங்கு குப்பை குவியலாக உள்ளது. இந்த ஒரு கட்டிடம் மட்டுமே விதி மீறல் இல்லை இது போன்று  சென்னையில் பல கட்டிடங்கள் விதிமீறி கட்டப்பட்டு இருக்கின்றன, ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை மாநகராட்சி தூங்கிக்கொண்டு இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழக அரசையும், சென்னை மாநகராட்சியும் நீதிமன்றம் நடத்த முடியாது என தெரிவித்தனர்.

மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் பொறுப்புணர்வு வேண்டும் எனவும் ஆனால் சென்னை மாநகராட்சி அதிகாரிகளை பொறுத்தவரை  மக்களுக்கு  பணியாற்றுகிறார்களா? என்ற ஒரு சந்தேகம் எழுவதாகவும் முறையாக அவர்கள் தங்களுடைய பணியை செய்யவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தீ விபத்துக்குள்ளான கட்டிடத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டதா? சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என அரசு கூடுதல் வழக்கறிஞரிடம்  நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் தீ விபத்து நடைபெற்ற பொழுது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள்  ஒரு நாளைக்கு உயர்நீதிமன்றத்தில் மற்றும் சென்னை மாநகராட்சி தொடர்பான வழக்குகள் 6 முதல் 10 வழக்குகள் விசாரணைக்கு வருவதாகவும் ஆனால் அந்த வழக்குகளில் கூட மாநகராட்சி உரிய முறையில் செயல்பட வில்லை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அதனால் இனி வரும் காலங்களில் சென்னை மாநகராட்சி தொடர்பான வழக்குகளில் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகி உரிய பதிலை அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து  உத்தரவிட்ட நீதிபதிகள் இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை முழுமையாகவும் அனைத்து தகவல்களும் இல்லாமல் உள்ளதால் புதிய அறிக்கையினை ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு தாக்கல் செய்த அறிக்கையில் தீ விபத்தில் உயிரிழந்தார்களின் குடும்பத்திற்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டு விட்டதா? எவ்வளவு இழப்பீடுகள் வழங்கப்பட்டிருக்கிறது? சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

குற்ற நடவடிக்கை நிலுவையில் உள்ளதா? என்பது தொடர்பான அனைத்து விவரங்களையும் தெளிவாகவும், விரிவாகவும் புதிய அறிக்கையாக ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின்  அடுத்த விசாரணையை டிசம்பர் 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x