Published : 08 Aug 2014 03:34 PM
Last Updated : 08 Aug 2014 03:34 PM

6 மாவட்டங்களில் ரூ.1,672 கோடியில் 6 கூட்டுக் குடிநீர் திட்டம்: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து இல்லங்களிலும் தரமான குடிநீர், குழாய் மூலம் கிடைக்கவும், திடக் கழிவு மேலாண்மைத் திட்டங்களை அனைத்துப் பகுதிகளிலும் செயல்படுத்தவும் புதிய திட்டங்களை முதல்வர் பேரவையில் அறிவித்தார். 6 மாவட்டங்களில் ரூ.1,672 கோடி மதிப்பீட்டில் 6 கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் அறிவித்தார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில், விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா:

6 மாவட்டங்களில் கூட்டுக் குடிநீர் திட்டம்:

தேனி மாவட்டம், வடுகபட்டி பேரூராட்சி மற்றும் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 60 ஊரகக் குடியிருப்புகளுக்கு, வைகை அணையினை நீர் ஆதாரமாகக் கொண்டு 72,945 மக்கள் பயன்பெறும் வகையில் 20 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம், மானாமதுரை, கண்டனூர்,நாட்டரசன்கோட்டை, கோட்டையூர், புதுவயல், கானாடுகாத்தான் மற்றும் பள்ளத்தூர் ஆகிய 8 பேரூராட்சிகள் மற்றும் 2,297 ஊரகக் குடியிருப்புகளுக்கு காவேரி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு, 5 லட்சத்து 7 ஆயிரத்து 775 மக்கள் பயன்பெறும் வகையில் 1,160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பேரூராட்சி மற்றும் 319 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், பத்மநாபபுரம் மற்றும் காட்டாத்துறை கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 570 மக்கள் பயன்பெறும் வண்ணம், 169 கோடி ரூபாய் மதிப்பில், பொதுவான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 9 ஊராட்சிகளைச் சார்ந்த 185 ஊரகக் குடியிருப்புகளுக்கு பவானி ஆற்றினை, நீர் ஆதாரமாகக் கொண்டு 80,997 மக்கள் பயன்பெறும் வகையில் 42 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் மற்றும் நம்பியூர் ஒன்றியங்கள், காரப்பாடி மற்றும் 5 ஊராட்சிகளைச் சார்ந்த 88 ஊரகக் குடியிருப்புகளுக்கு பவானி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு 18,731 மக்கள் பயன்பெறும் வகையில் 11 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சி, திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி நகராட்சிகளிலுள்ள 2 லட்சத்து 81 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில், 267 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த்திட்டம் செயல்படுத்தப்படும். ஆக மொத்தம், 6 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் 1,672 கோடியே ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

பேரூராட்சிகளுக்கு குடிநீர் மேம்பாட்டுத் திட்டம்:

பேரூராட்சிகளுக்கு என காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம்மற்றும் கருங்குழி பேரூராட்சிகளுக்கு 11 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 47,502 மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டங்கள், திருச்சி மாவட்டம் கல்லக்குடி, புள்ளம்பாடி மற்றும் முசிறி பேரூராட்சிகளுக்கு 15 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 57,800 மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டங்கள், நாமக்கல் மாவட்டம் மோகனூர் மற்றும் பொத்தனூர் பேரூராட்சிகளுக்கு 7 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 35,600 மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டங்கள், கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு 2 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 12,020 மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் தேவதானப்பட்டி பேரூராட்சிகளுக்கு 16 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 49,000 மக்கள் பயன்பெறும் வகையிலான குடிநீர் மேம்பாட்டுத் திட்டம், என மொத்தம் 53 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 குடிநீர் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

குடிநீர் விநியோகத் திட்டம்:

கோயம்புத்தூர் மாநகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்வதற்கு முன்பிருந்த பகுதிகளுக்கு சீரான அழுத்தத்துடன் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில், குடிநீர் விநியோகத் திட்டம் 451 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

தொழிற்சாலைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை எதிர்மறை சவ்வூடு பரவுதல் முறையில், மூன்றாம் நிலை சுத்திகரிப்பு செய்து வட சென்னை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் மின்சார வாரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்குவதற்கு கொடுங்கையூரில் நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவுதல் முறையிலான மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் 255 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவிலேயே நான்காவது மிகப் பெரிய மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி விளங்குகிறது.

ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம்:

மழைக் காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் சிறந்த வடிகால் வசதிகளை ஏற்படுத்தி வெள்ளப் பெருக்கினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பினைத் தடுக்க ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காக 4,034 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், சிறிய கால்வாய்களில் உள்ள மழைநீர் பெரிய கால்வாய்களை சென்றடைந்து இயற்கை நீர்வழித் தடங்கள், கால்வாய்கள் மற்றும் நதிகள் வழியாக வங்காள விரிகுடா கடலை சென்றடையும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக, சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு 1,101 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் வடிநிலத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடப்பாண்டில் எடுத்துக் கொள்ளப்படும்.

மண்டல் அளவிலான ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம்:

திடக்கழிவு மேலாண்மை நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிகப் பெரும் சவாலாக உள்ளது. நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் திடக் கழிவு மேலாண்மையை அறிவியல் ரீதியாக செயல்படுத்த தேவையான நிலம் கிடைப்பதில் பல்வேறு தடைகள் உள்ளன. தற்பொழுது உள்ள குப்பை கிடங்குகள் நிரம்பி அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினை கருத்தில் கொண்டு, இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஒரு புதிய முயற்சியாக மண்டல அளவிலான ஒருங்கிணைந்த திடக் கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இதன் முதற்கட்டமாக நடப்பாண்டில் திருச்சிராப்பள்ளி, திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாநகராட்சிகளிலும் நாகர்கோவில் நகராட்சியிலும் மண்டல அளவிலான ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், 631 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

அம்மா மக்கள் சேவை மையம் நடத்தப்படும்:

அலுவலர்கள் அலுவல் நிமித்தமாக வெளி இடங்களுக்கு சென்றுவிடும் நேர்வில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள்அலுவலர்களை சந்திக்க இயலாமல் போய்விடுகிறது. இந்த இடர்பாட்டை தவிர்க்க, வாரத்தில் ஒரு நாள் மாநகராட்சிகளில் உள்ள மண்டல அலுவலகங்களிலும், நகராட்சிகளிலும் பேரூராட்சிகளிலும் பிறப்பு இறப்பு சான்றிதழ், வர்த்தக உரிமம், பாதாள சாக்கடை குழாய் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, தொழில் வரி விதிப்பு, சொத்து வரி கேட்பு, கட்டட அனுமதி, பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சான்றிதழ் ஆகியவை கோரும் விண்ணப்பங்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், "அம்மா மக்கள் சேவை மையம்" நடத்தப்படும்.

இந்த மையத்தில் ஒவ்வொரு புதன் கிழமையிலும் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முறையே உதவி ஆணையாளர்கள், ஆணையர்கள், செயல் அலுவலர்கள் பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது ஆய்வு செய்து, மக்கள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால வரையறைக்கு ஏற்ப ஆணை வழங்க நடவடிக்கை எடுப்பார்கள். அனைத்து விண்ணப்பங்களையும் கணினியில் பதிவு செய்து, ஒவ்வொரு கோரிக்கை மனுவிற்கும் விண்ணப்பதாரர்களுக்கு முறையான பதில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இப்பணி முறையாக நடப்பதை உறுதி செய்ய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அந்தந்த துறை தலைவர்கள் வலைதளம் மூலம் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம் அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு காலவிரயம் இன்றி குறைந்த செலவில் சென்றடைவது உறுதி செய்யப்படும்.

அரசின் மேற்காணும் நடவடிக்கைகள் மூலம், மக்களின் அடிப்படை வசதிகள் மேலும் மேம்படவும், பொதுமக்களின் குறைகள் தீரவும் வழி வகுக்கும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x