

குழந்தைகள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் குழந்தைகளுக்கான அமைதி (peace for children) என்ற இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசியதாவது:
குழந்தைகள் நிம்மதியாக தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுடைய நிம்மதியை கெடுப்பது பெரியவர்கள் தான். நாட்டின் எதிர்காலமே குழந்தைகளை நம்பித்தான் உள்ளது. நாட்டின் பெரிய சொத்தாக குழந்தைகள் விளங்குகின்றனர். மேற்கத்திய நாடுகள் குழந்தைகளின் வளர்ச்சிக்காக செய்யும் செலவில் ஒரு சதவீதம் கூட இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் செய்வதில்லை. குழந்தைகள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை.
சாலையோரங்களில் குழந்தைகள் பிச்சை எடுப்பதன் பின்னணியில் பெரிய மாபியா கும்பலே உள்ளது. இதனை எந்த காவல் துறையினரோ அரசாங்கமோ சமூகத்தில் இருக்கும் யாரும் தடுப்பதில்லை. இதுபோன்ற மாபியா கும்பலுக்கு கொலைக் குற்றத்திற்கு வழங்கக்கூடிய தண்டனைக்கு இணையான தண்டனையை வழங்க வேண்டும். பிரதமர் அலுவலகத்தில் இருந்து இந்த இயக்கம் தொடர்பாக பேசி இருப்பதாக கேள்விப்பட்டேன். அவர்கள் இந்த இயக்கத்தை கையில் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய www.peaceforchildren.net என்ற இணையதளத்தையும், அவசர உதவிக்கு 9384860971 என்ற தொலைபேசி எண்ணையும் நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார். இலவச தொலைபேசி எண் மற்றும் மொபைல் ஆப் ஆகியவை நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளன்று செயல்பாட்டுக்கு வரும் என்று ஸ்ரீ தயா பவுன் டேஷன் தலைவர் லதா ரஜினி காந்த் தெரிவித்தார்.