Published : 28 Nov 2018 10:02 AM
Last Updated : 28 Nov 2018 10:02 AM

30 மூட்டைகளில் பணம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் மேலும் 20 மூட்டைகளில் கத்தரித்து கட்டி வீசப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்: போலீஸார் தீவிர விசாரணை

மாதவரத்தில் மேலும் 20 மூட்டைகளில் கத்தரிக்கப்பட்ட நிலையில் ரூ.500, ரூ. 1,000 நோட்டுகள் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி "பண மதிப்பிழப்பு" நடவடிக்கையை மேற்கொண்டார். அதன்படி, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள அனுமதியும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னையை அடுத்த மாதவரம் புழல் ரெட்டேரி அருகே ஆட்டுச் சந்தை பகுதியில் குப்பைகள் கொட்டும் இடத்தில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ருபாய் நோட்டுகள், சிறு சிறு துண்டுகளாக கத்தரிக்கப்பட்டு, 30 மூட்டைகளில் கட்டி நேற்று முன்தினம் வீசப்பட்டு இருந்தன.

புழல் போலீஸார் இதை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று காலை அதே இடத்தில் மீண்டும் 20 மூட்டைகளில் பழைய ரூ.500, ரூ. 1,000 நோட்டுகள் சிறு சிறு துண்டுகளாக கத்தரித்து வீசப்பட்டு இருந்தன. இதையும் தற்போது போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் பழைய மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதை வீசிச் சென்றது தொழில் அதிபரா? கட்சி நிர்வாகியா அல்லது வேறு யாரேனுமா? என்று போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பணத்தை வீசிச்சென்றவர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x