தி.நகர் பேருந்து நிலையத்தில் விபத்து: ஓட்டுநரின் கவனக்குறைவால் பேருந்துகளுக்கு இடையில் சிக்கிய பெண் பரிதாப பலி

தி.நகர் பேருந்து நிலையத்தில் விபத்து: ஓட்டுநரின் கவனக்குறைவால் பேருந்துகளுக்கு இடையில் சிக்கிய பெண் பரிதாப பலி
Updated on
1 min read

தி.நகர் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறுவதற்காக வந்த பெண் பயணி, ஓட்டுநரின் கவனக்குறைவால் இரண்டு பேருந்துகள் இடையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை சைதாப்பேட்டை கொத்தவால்சாவடி தெருவைச் சேர்ந்தவர் வள்ளி (48). பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வள்ளி தினமும் சைதாப்பேட்டையிலிருந்து திநகர் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து பேருந்து மூலம் தரமணி செல்வது வழக்கம்.

வழக்கம்போல் இன்று காலை பணிக்குச் செல்வதற்கு தி.நகர் பேருந்து நிலையம் வந்த அவர் அங்கிருந்து தடம் எண் 519 பேருந்தில் ஏறுவதற்காகச் சென்றுள்ளார். பக்கத்தில் 5 ஜி பேருந்து நின்றுள்ளது.  இரண்டு பேருந்துகள் இடையே நுழைந்த அவர் 519 எண் பேருந்தில் ஏறச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பேருந்தின் அருகில் நின்ற தடம் எண் 5 ஜி பேருந்தை ஓட்டுநர் கன்னியப்பன் கவனிக்காமல் எடுத்துள்ளார்.

நின்று கொண்டிருந்த பேருந்து திடீரென  நகர்ந்ததால் அதிர்ச்சியான வள்ளி, பேருந்துகளுக்கு இடையிலிருந்து வெளிவர முயற்சித்துள்ளார். ஓட்டுநர் கன்னியப்பன் கவனிக்காமல் பேருந்தை வேகமாகச் செலுத்தியதில், இரண்டு பேருந்துகளுக்கு இடையில் சிக்கிய வள்ளி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

 இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே கன்னியப்பன் அப்படியே பேருந்தை நிறுத்தினார். பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் அநியாயமாக வள்ளியின் உயிர் பறிபோனது. விபத்து குறித்து  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாம்பலம் போலீஸார் வள்ளியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து பேருந்து ஓட்டுநர்கள் கன்னியப்பன், ரவி என்ற இரண்டு பேரையும் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி  வருகின்றனர். பயணிகள் அதிகம் புழங்குவதால் பரபரப்புடன் காணப்படும் தி.நகர் பேருந்து நிலையத்தில் காலையில் நடந்த விபத்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விபத்து குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலானாய்வு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in