

சென்னை புழலில் சரக்கு வேன் பழுதாகி நின்றதால், அதை தள்ளி விடுவதற்காக சாதாரண உடை அணிந்த போலீஸாரை ஓட்டுநர் அழைத்தார். அந்த சரக்கு வாகனம் வேலூரில் இருந்து திருடப்பட்டு வந்ததை கண்டுபிடித்த போலீஸார் அந்த நபரை கைது செய்தனர்.
சென்னையை அடுத்த புழல் மத்திய சிறை அருகே கடந்த 27-ம் தேதி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே பகுதியில் உள்ள டீக்கடை அருகே சென்றபோது திடீரென பழுதாகி நின்றது. இதைத் தொடர்ந்து வேனின் ஓட்டுநர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் 2 பேரை அழைத்து வேன் பழுதடைந்து விட்டதால் வாகனத்தை சிறிது தள்ளி விடு மாறு கேட்டுக் கொண்டார். அதன் படி, 2 பேரும் சென்று வேனை தள்ளினர்.
அப்போது, சரக்கு வேனில் சாவி இல்லாததும், ஓட்டுநர் அருகே உள்ள கதவு கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதையும் கண்டு அவர்கள் சந்தேகம் அடைந் தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட ஓட்டுநரை பிடித்து விசாரித்தனர். இதில், பிடிபட்டவர் பெரியபாளை யத்தைச் சேர்ந்த பாலாஜி என்ற பாலகிருஷ்ணன் (27) என்பதும் இவர் வேலூர் மாவட்டம் சத்துவாச் சேரி சேர்ந்த ரகுமான் என்பவரின் சரக்கு வேனை திருடி வந்ததும் தெரியவந்தது.
வேனை தள்ளிவிட அழைத்தது தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச் சேர்ந்த சாதாரண உடை அணிந் திருந்த காவலர்களான செல்வ மாணிக்கம், மதன் என்பது வேனை திருடி வந்த நபருக்கு பின்னர்தான் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பாலாஜி புழல் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதற்கிடை யில், சமயோசிதமாக செயல்பட்ட காவலர்களான செல்வமாணிக்கம், மதன் குமார் இருவரையும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்துப் பாராட்டினார்.