Published : 26 Nov 2018 03:23 PM
Last Updated : 26 Nov 2018 03:23 PM

காரில் இருந்தவரிடம் முகவரி கேட்பதுபோல் 4 சவரன் செயின், செல்போன் பறிப்பு: கைதான குற்றவாளிகள் தப்பிக்கும்போது கை முறிவு

பாரிமுனை பகுதியில் 4 சவரன் செயின், செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பிய 3 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து ஆட்டோவில் அழைத்துச் செல்லும்போது கீழே விழுந்த இரண்டுபேருக்கு கைமுறிவு ஏற்பட்டது.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, நடராஜ முதலித் தெருவைச் சேர்ந்தவர் அபிசுல்லா (36)  அபிசுல்லா  கடந்த வாரம் தனது காரில் சாலையோரம் நின்றுக்கொண்டிருந்தார். காருக்குள் அமர்ந்திருந்த அவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர்  அபிசுல்லாவிடம் முகவரி கேட்பது போல நடித்து, அவர் எதிர்பாராத நேரத்தில் காரில் இருந்தவரை தாக்கி அவரிடமிருந்த 4 சவரன் செயின் அவர் சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு ஓடினர்.

உடனே, அபிசுல்லா சத்தம் போட்டுக் கொண்டே அவர்களை காரில் துரத்திச் சென்றார். இதுப்பற்றி தகவல் கிடைத்த வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பான சி.சி.டி.வி.காட்சியை வைத்து விசாரணை செய்து 3 பேரையும் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  

விசாரணையில் பிடிபட்ட நபர்கள்  மூளக்கொத்தளத்தைச் சேர்ந்த சுரேந்தர் (23)  கொடுங்கையூர் எழில் நகரைச்சேர்ந்த வெங்கடேஷ் (எ) பல்லு வெங்கடேஷ், (30) சேகர் (எ) கபாலி (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்த அவர்களை ஆட்டோவில் அழைத்துச் சென்றபோது அவர்களில் வெங்கடேஷ் (எ) பல்லு வெங்கடேஷ்,  சேகர் (எ) கபாலி ஆகிய இருவரும் தப்பிக்க ஆட்டோவில் இருந்து கீழே குதித்த போது இடது கையில் முறிவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை அளித்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x