Published : 05 Nov 2018 02:19 PM
Last Updated : 05 Nov 2018 02:19 PM

எழிலகத்தில் திடீர் தீ விபத்து: நீர் வள அமைப்பு அலுவலகம் தீக்கிரையானது

சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதில் நீர் வள அமைப்பு அலுவலகம் முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

சென்னை சேப்பாக்கத்தில் கடற்கரை உழைப்பாளர் சிலை எதிரில் எழிலகம் அமைந்துள்ளது. இங்கு அரசு பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை, சமூகநலத்துறை, ஜெயலலிதா வழக்கு விசாரணை நீதிபதி(ஓ) ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன.

தினமும் ஆயிரக்கணக்கானோர் புழங்கும் எழிலகத்தில் இன்று தீபாவளியை ஒட்டி ஒரு நாள் முன்னரே அரசு விடுமுறை விடப்பட்டதால் அலுவலகங்கள் அனைத்தும் விடுமுறை காரணமாக பூட்டப்பட்டு எழிலகம் முழுவதும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

எழிலகம் பொதுப்பணித்துறை அலுவலகம் பின்புறம் உள்ள நீர் வள அமைப்பு அலுவலகத்தின் முதல் தளத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீப்பற்றியதும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் திருவல்லிக்கேணி துணை ஆணையர் விசாரணை நடத்தினார்.

எழிலகத்தில் தீ விபத்து நேர்வது இது முதன்முறையல்ல, இதற்கு முன்னர் பலமுறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருமுறை தீயணைப்புத்துறை வீரர் ஒருவர் மரணமடைந்தார். பெண் எஸ்.பி. பலத்த காயமடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x