Published : 03 Nov 2018 08:30 AM
Last Updated : 03 Nov 2018 08:30 AM

தமிழகத்தின் முதல் பெண் வில்லிசை கலைஞர் மறைவு: வறுமையிலும், தனிமையிலும் தவித்த பூங்கனி

தமிழகத்தின் முதல் பெண் வில்லிசை கலைஞர் பூங்கனி (84) நேற்று முன்தினம் இரவு உடல்நலமின்மையால் காலமானார்.

தென் தமிழகம் முழுவதும் வில்லுப்பாட்டு கலையை பரப்பிய பெருமைக்குரிய பூங்கனி, தனது கடைசி காலத்தில் மிகவும் கஷ்டஜீவனத்தில், தனிமையில் வாழ்ந்து மறைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் தென்மாவட்ட கிராம தேவதை கோயில்களில் கொடை விழாக்கள் நடப்பது வழக்கம். இவ்விழாவில் வில்லுப்பாட்டே பிரதானம்.

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் சரவணந்தேரிதான் பூங்கனியின் பூர்வீகம். அப்பகுதியை சேர்ந்த சிவலிங்கம் வாத்தியார், முகிலன்விளையைச் சேர்ந்த வேதமாணிக்கம் ஆகியோரிடம் வில்லுப்பாட்டுக் கலையைக் கற்றார். தனது 10 வயதில் இருந்தே கோயில்களில் வில்லுப்பாட்டு பாடத் தொடங்கினார்.

ஆயிரக்கணக்கான மேடைகள்

தென் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மேடைகளில் வில்லுப்பாட்டு நடத்திய பெருமைக்குரியவர் பூங்கனி. அன்றைய காலங்களில் வில்லுப்பாட்டு பாட பூங்கனியின் தேதி கிடைப்பதே அரிதான விஷயம். இன்று நடிகைகள் பெயரில் சேலை, சுடிதார் என உலா வருவது போல், அக்காலத்தில் `பூங்கனி தோடு’ மிகவும் பிரசித்தி பெற்றது.

இவரது கணவர் தங்கபாண்டி கடம் வாசிப்பு கலைஞர். இவர்களுக்கு வாரிசு இல்லை. முதுமையிலும் அத்தனை சுவாமி கதைகளையும் நினைவில் வைத்திருந்தார்.

சென்னை பல்கலைக்கழக விருது

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல்துறை, மூன்றாண்டுகளுக்கு முன்பு இவரை அழைத்து,வில்லுப்பாட்டு பாட வைத்ததோடு, முத்துமாரி விருதையும் வழங்கி கவுரவித்தது. கன்னியாகுமரி மாவட்டம், ஆலடிவிளைஒற்றைவீரன் கோயில் வளாகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற வில்லுப்பாட்டு நிகழ்ச்சிதான் பூங்கனியின் கடைசி நிகழ்ச்சி.

இலவச அரிசியில் வாழ்க்கை

4 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கபாண்டி மறைவுக்கு பின்னர், கொட்டாரம் ராமச்சந்திரா நகரில் வசித்த பூங்கனிக்கு அரசு முதியோர் உதவித் தொகையாக 1,000 ரூபாய் வழங்கியது. எம்எல்ஏ, எம்பி என பல தரப்பிலும் மனு கொடுத்தும் தமிழகத்தின் முதல் பெண் வில்லிசை கலைஞரான இவருக்கு, கலைஞர்களுக்கான எந்த ஓய்வூதியமும் கிடைக்கவில்லை. அரசு வழங்கிய இலவசஅரிசி, ஆயிரம் ரூபாய் உதவித் தொகைக்குள்ளாக தனது வாழ்வை சுருக்கிக் கொண்டார் பூங்கனி.

வாரிசு இல்லாததால் கடைசிகாலத்தில் தங்களை பராமரிப்பதோடு, அடக்கமும் செய்ய வேண்டும் என்னும் நிபந்தனையுடன், அண்டை வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, தான் வசித்து வந்த வீட்டை பூங்கனி தம்பதியினர் எழுதிக் கொடுத்திருந்தனர்.

பூங்கனியின் இறுதிச்சடங்கை பக்கத்து வீட்டுக்காரரே செய்துள்ளார். ஒரு கலைஞருக்கு உரிய எந்த மரியாதையும் கிடைக்கப்பெறாமல் சராசரியாய் முடிந்த பூங்கனியின் வாழ்க்கை சோகத்தை படரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x