

‘கஜா’ புயலினால் இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
'கஜா' புயலானது வெள்ளிக்கிழமை அதிகாலை கரையை கடந்த நிலையில் இலங்கையிலுள்ள வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் பரவலான மழை பெய்தது. புயலானது கரையை கடந்த பின்னரும் மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்து வருவதனால் அனேகமான இடங்கள் நீரில் முழ்கியுள்ளது. காற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்படுவதனால் பல வீடுகளின் வேலிகள் மற்றும் கூரைகள் தூக்கி எறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், ஊர்காவல்துறை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சுமார் 100-லிருந்து 200 மீட்டர் வரையிலும் கடல் நீர் உள்வாங்கியிருந்தது. இதனால் இப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தரை தட்டி நின்றன.
மேலும் வட மாகாண கவர்னர் ரெஜினோல்ட் குரே மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழையினால் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தார்.