Published : 23 Nov 2018 09:30 AM
Last Updated : 23 Nov 2018 09:30 AM

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்காக சென்னையில் சிறப்பு தகவல் மையம்: இலவச தொலைபேசி எண்ணும் அறிவிப்பு

சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் தமிழக பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான இலவச தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர் தா.கி.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் தமிழக பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மையத்தை 18004251757 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஜனவரி 31-ம் தேதி வரை இந்த மையம் செயல்படும் .

கடந்த ஆண்டு குமுளியில் அமைக்கப்பட்டிருந்த தகவல் மையம், இந்த ஆண்டு தேனி - குமுளி சாலையில் உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயில் சார்பில் புளியறையிலும் பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான நெல்சேர் கட்டிடம் முன்பும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி எல்லையான களியக்காவிளை தகவல் மையத்தில் சிறப்புப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை, ஓய்வெடுக்க இடம் உள்ளிட்ட வசதிகளுடன் வழிகாட்டி விளம்பர பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், எந்த வகையிலும் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்.

இவ்வாறு ஆணையர் தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x