

எய்ட்ஸ் நோயாளிகள் சத்து மிகுந்த உணவை இலவசமாகப் பெறுவதற்கு அவர்கள் வீடுகளிலே இரும்பு, புரதச்சத்து செடிகள் வளர்ப்புத் திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில், முதன்முறையாகத் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2.50 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். இதில் குழந்தைகள் 8,221 பேர் உள்ளனர். எய்ட்ஸ் நோய்க்கு தற்போதுவரை உயிர்காக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், இறப்பைத் தள்ளிப்போடுவதற்கான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
இந்த மருந்து சாப்பிடுவதால் மட்டுமே அவர்கள் வாழ்நாள் நீடிக்காது. மருந்து, மாத்திரையுடன் சத்தான உணவை அதிகம் சாப்பிட்டால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறையாமல் இருக் கும். வாழ்நாளும் நீடிக்கும். ஆனால் அவர்கள் பெரும்பாலும் ஏழ்மையில் இருப்பதால் உயிர் வாழ மாத்திரைகளை மட்டுமே சார்ந்துள்ளனர்.
முன்னோடித் திட்டம்
இது போன்ற நிலையைக் களைய எய்ட்ஸ் நோயாளிகள், வீடுகளிலே புரதம், இரும்புச்சத்து செடிகளை வளர்த்து சத்துமிகுந்த உணவுகளைச் சாப்பிட்டு பயன்பெறும் முன்னோடித் திட்டம் திண்டுக்கல் மீராபவுண்டேசன் மற்றும் அமெரிக்காவின் நூரிஸ் இண்டர்நேஷனல் சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தோட்டங்கள் கண்காணிப்பு
இந்நிகழ்ச்சியில், மீரா பவுண்டேசன் இயக்குநர் ராஜா முகமது, வீடுகளில் சத்துமிகுந்த உணவு செடிகளை வளர்க்க எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பப்பாளி, முருங்கை மரக்கன்றுகளும், கீரை, பாகல், சுரை, பூசணி உள்ளிட்ட 15 வகையான மரக்கன்றுகள், விதைகளை வழங்கினார்.
அவர் கூறியது: முதல்கட்டமாக இந்த முன்னோடித் திட்டத்தில் 50 எய்ட்ஸ் நோயாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மரக்கன்றுகள், விதைகள் வழங்கப்பட்டுள்ளன.
மரக்கன்றுகளை வழங்குவதுடன் நின்றுவிடாமல் தொடர்ந்து இவர்கள் வளர்க்கும் வீட்டுத் தோட்டங்களைக் கண்காணித்து அவர்கள் சத்தான உணவுகளை வீட்டிலேயே பெற உதவி செய்யப்படும்.
இந்தத் திட்டம் வெற்றியடையும்பட்சத்தில் 5 ஆயிரம் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மீரா பவுண்டேசன் நிறுவனர் செல்வராணி, எய்ட்ஸ் சிகிச்சைப்பிரிவு மருத்துவ அலுவலர் டாக்டர் கலாவதி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்புத் திட்ட மேலாளர் ஜெசிந்தா, நூரிஸ் இண்டர்நேஷனல் மாணவி பிரியங்கா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சத்தான உணவு அவசியம்
இதுகுறித்து நலப் பணிகளின் உதவிஇயக்குநர் மங்கையர்கரசி கூறியது: எய்ட்ஸ் நோயாளிகள் ஏஆர்டி மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரையின்படி சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகள் மூலம் இந்த நோய் சிசுவுக்குத் தொற்றாத அளவுக்கு மருத்துவ நுட்பம் தற்போது வளர்ந்துள்ளது. எனவே தயங்காமல் சிகிச்சை பெற வேண்டும். இது வெள்ளை அணுக்கள் குறைவதைத் தடுக்கும், மாத்திரை மட்டும் சாப்பிட்டால் போதாது, சத்தான உணவுகளையும் உண்ண வேண்டும். சத்தான உணவு என்றதும் அதிகம் பணம் தேவைப்படும் என தவறாக நினைக்கின்றனர். அதுதவறு. கீரை, பப்பாளி உள்ளிட்ட சத்துமிகுந்த உணவுப் பொருட்கள் எளிதாகக் கிடைக்கின்றன. அதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். காசநோய் உள்ளிட்ட நோய்கள், தொற்று நோய்கள் வராது என்றார்.