Published : 09 Nov 2018 02:55 PM
Last Updated : 09 Nov 2018 02:55 PM

ஸ்டாலின் என பெயர் வைத்ததால் சர்ச் பார்க் பள்ளியில் என்னை அனுமதிக்கவில்லை: ஸ்டாலின் பேச்சு

ஸ்டாலின் என்ற பெயரால் தான் பல சிக்கல்களைச் சந்தித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

துறையூரில் இன்று திருமண விழாவொன்றில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், பின்பு உரையாற்றினார்.

அதன் விவரம்:

''வீட்டில் கனிமொழி, செல்வி , தமிழரசு என அனைவருக்கும் தமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட்டது. நான் பிறந்த நேரத்தில் ரஷ்ய நாட்டின் அதிபர் ஸ்டாலினின் இரங்கல் கூட்டத்தில் தலைவர் கருணாநிதி பேசிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில், நான் பிறந்த செய்தியை சொன்னதால் எனக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டினார் தலைவர்.

அந்தப் பெயரால் நான் பல சிக்கல்களைச் சந்தித்தது உண்டு. சில வெளிநாடுகளில் கொஞ்சம் ஆச்சரியத்தோடு பார்ப்பார்கள். அதுமட்டுமல்ல சர்ச் பார்க் கான்வென்ட் பள்ளியிலே என்னைச் சேர்க்க அழைத்துச் சென்றபோது, ஸ்டாலின் என்ற பெயர் ரஷ்ய நாட்டிலே ஒரு சிக்கலான பெயராக இருக்கிறது, அதனால் ஸ்டாலின் என்ற பெயரை மாற்றி வேறு பெயர் வைத்தால் நாங்கள் சேர்த்துக்கொள்கிறோம் என்று பள்ளி நிர்வாகம் கூறியது. அதற்கு பள்ளிக்கூடத்தை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர என் மகனுடைய பெயரை மாற்ற மாட்டேன் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறார். நாட்டுக்காக உழைத்த உத்தமரின் பெயரை எனக்குச் சூட்டினர்.

உங்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு வடமொழிப் பெயர்களோ - சமஸ்கிருதப் பெயர்களோ - ஆங்கிலப் பெயர்களோ - நீங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் வைக்கக்கூடாது.

இன்று மாலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு என்னைச் சந்திக்க வருகிறார்.

மேலும், இரண்டு நாட்களுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்திக்க வருகிறார். திமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டுமென்று கலந்து ஆலோசனை செய்வதற்காக அவர்கள் வருகின்றனர். மத்திய பாஜக அரசையும், அதிமுக ஊழல் ஆட்சியையும் அகற்ற வேண்டும்''.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x