Published : 12 Nov 2018 10:50 AM
Last Updated : 12 Nov 2018 10:50 AM

கஜா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தேவைப்பட்டால் கேரள அதிகாரிகளின் ஆலோசனையை பெறுக; ராமதாஸ்

கஜா புயல் பாதிப்புகளைக் குறைப்பதற்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “வங்கக்கடலில் சென்னையிலிருந்து 900 கிலோமீட்டர் தொலைவில் அந்தமான் அருகே உருவாகியுள்ள புயல் சின்னம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், வரும் 15 ஆம் தேதி அதிகாலையில் கடலூருக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே புயல் கரையை கடக்கலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. புயல் எச்சரிக்கை வட தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயல் காரணமாக வட தமிழகத்தில் நாளை மறுநாள் மாலை முதல் மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்; கடல் கொந்தளிப்பாகக் காணப்படும். தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் 14 ஆம் தேதி பலத்த மழையும், 15 ஆம் தேதி ஒரு சில இடங்களில் மட்டும் மழையும் பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வதில் அதிமுக அரசின் மோசமான கடந்த காலம் காரணமாக புயல், மழை என்பன போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே மக்களின் உடல்கள் அச்சத்தில் நடுங்கத் தொடங்குகின்றன. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரி நள்ளிரவில் திறந்து விடப்பட்டதாலும், தொடர் மழையாலும் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் ஏற்பட்ட கோர விளைவுகளின் பாதிப்புகளில் இருந்து அங்குள்ள மக்கள் இன்னும் மீளவில்லை.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் பின்பகுதியில் சென்னையை தாக்கிய வர்தா புயலால் பெரும்பாலான மரங்கள் வேருடன் வீழ்ந்தன. மக்களின் உடமைகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. அப்போதெல்லாம் தொண்டு நிறுவனங்கள் கொண்டு வந்த நிவாரணப் பொருட்களைப் பறித்து அவற்றில் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டி வழங்கியதைத் தவிர அரசு எதுவும் செய்யவில்லை.

2017 ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கிய ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளும், புயலுக்கு முன்னும், பின்னும் அரசின் அலட்சியத்தால் ஏராளமான மீனவர்கள் நடுக்கடலில் உயிரிழக்க நேரிட்டதும் தமிழக வரலாற்றின் கருப்பு பக்கங்கள் ஆகும். புயலையும் மழையையும் திறம்பட சமாளிக்க முடியாத ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது என்பதால் புயல் ஆபத்து நீங்கும் வரை, மண் குதிரையை நம்பி ஆற்றைக் கடக்கும் பயணிகளின் மனநிலையில் தான் மக்கள் இருக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்களின் மனநிலையோ இன்னும் மோசமாக உள்ளது. 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தாக்கிய தானே புயல், 2015 ஆம் ஆண்டு இறுதியில் தாக்கிய புயல் வெள்ளம் என அடுத்தடுத்து இரு பேரிடர்களை எதிர்கொண்டு விழுப்புண்களுடன் இருக்கும் கடலூர் மாவட்டம் இன்னும் ஒரு பேரிடரை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை. ஆனாலும், இயற்கையை கட்டுப்படுத்துவதோ, அதன் சீற்றத்தை தடுத்து நிறுத்துவதோ எந்த சக்தியாலும் இயலாதது ஆகும். கடந்தகால அனுபவங்களிலிருந்து கற்ற  பாடங்களின் உதவியுடன் புத்திசாலித்தனமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பாதிப்புகளை ஓரளவு கட்டுப்படுத்துவது மட்டுமே சாத்தியமாகும்.

சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு எந்த முன்னெச்சரிக்கைப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. முதல் முன்னெச்சரிக்கைப் பணியாக வெள்ளப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் தேசியப் பேரிடர் மீட்புப் படைகளை நிறுத்த வேண்டும். வட மாவட்டங்களில் ஒன்றியத்துக்கு ஓர் ஐஏஎஸ் அதிகாரி வீதம் நியமித்து எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு சேதத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

புயலாலும், மழையாலும் மின் கம்பிகள் அறுந்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுத்தல், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தல், குடிசைப் பகுதிகளில் சேதம் ஏற்படாமல் தடுத்தல், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி சமூக நலக்கூடங்களில் தங்க வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தேவையான எண்ணிக்கையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். புயல் - மழைக்காலங்களில் போது பொதுமக்கள் செய்ய வேண்டியவை எவை, செய்யக்கூடாதவை எவை? என்பது குறித்து ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கேரளத்தில் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தை அம்மாநில அரசாங்கம் மிகச்சிறப்பாக சமாளித்தது. தேவைப்பட்டால் அம்மாநில அதிகாரிகளின் ஆலோசனையையும் பெறலாம்.

புயல் தாக்கிய பின் பாதிப்புகளை சரி செய்வதை விட, முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கை எடுப்பது தான் சிறந்தது என்பதால், அதற்கேற்ற வகையில் முன்னெச்சரிக்கைப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அதன்மூலம் கஜா புயலால் தமிழகத்திற்கு ஏற்படவுள்ள பாதிப்புகளை இயன்றவரை குறைக்க வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x