Published : 28 Aug 2014 03:13 PM
Last Updated : 28 Aug 2014 03:13 PM

திருமணத்திற்கு ஜோதிடப் பொருத்தமல்ல; மருத்துவ ரீதியான பொருத்தமே தேவை: கி.வீரமணி வலியுறுத்தல்

திருமணத்திற்கு ஜோதிடப் பொருத்தமல்ல, மருத்துவ ரீதியான பொருத்தமே தேவை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு முன் மணமக்கள் மருத்துவ சோதனை செய்து கொள்வது தான் சரியானது என மதுரை உயர் நீதிமன்ற கிளை வழங்கிய தீர்ப்பை வரவேற்று வீரமணி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: "திருமணத்திற்கு முன் மணமக்கள் மருத்துவ சோதனை செய்து கொள்வது தான் சரியானது - அறிவியல் பூர்வமானது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி என்.கிருபாகரன் அளித்த தீர்ப்பு சமூக நலம் சார்ந்த கண்ணோட்டத்துடன் விஞ்ஞான பார்வையோடு வழங்கப்பட்டுள்ளது.

திருமணங்களை ஏற்பாடு செய்யும் முன்பு நம் நாட்டுச் சமூக அமைப்பில் உள்ள பெரும்பாலான நடைமுறை என்ன? ஜாதி, மதம், அதற்குப் பாதுகாப்பான ஜோசியம் பார்த்தல் - இவைகளைப்பற்றி தான் கவலைப்பட்டு அதிக முக்கியத்துவம் கொடுத்து, (ஏராளமான வரதட்சணை என்று கொடும் சமூக நோய்க்கும் சத்தமில்லாமல் ஆளாகி) திருமணங்களை நடத்திக் கொள்ளுகின்றனர்.

மணமக்களுக்கு மற்ற பொருத்தங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக, அறிவியல் அடிப்படையில் ஆதாரபூர்வமானதாக இவை இல்லாத நிலையில் - அறிவியல், உடலியல் - மருத்துவ ரீதியாக அவ்விருவருக்கும் மருத்துவப் பரிசோதனை சான்றுகளைப் பார்த்து ஒருவருக்கொருவர் உடல் ரீதியாகப் பொருத்தமானவர்களா என்று அறிந்து, திருமணங்களை ஏற்பாடு செய்தால், பின்னாள் அத்திருமணங்கள் - அந்தக் காரணங்களுக்காகத் தோல்வி அடையும் நிலை - வழக்கு மன்றங்களுக்குச் செல்லும் அவசியம் ஒரு போதும் ஏற்படாது. தேவையற்ற மன உளைச்சல்கள் - தானாகவே தீரும்.

ஜோதிடம் பார்ப்பது, மற்ற பொருத்தங்களை சடங்கு சம்பிரதாயங்கள் வழியில் பார்ப்பது அறிவியல் - பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் சரியானது - உண்மையானது அல்ல.

மதுரை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு மத்திய, மாநில அரசுகள் திருமணச் சட்டங்களில் இம்முயற்சியை ஒரு முன் நிபந்தனையாக்கிடும் வகையில் சட்ட திருத்தத்தைக் கொணர ஒரு முன்னோட்டமாக அமைய வேண்டும்.

மருத்துவர்கள் தவறான சான்றிதழ் தந்தால் கடும் தண்டனை என்றும்கூட அச்சட்டத்தின் ஒரு பிரிவை முக்கியமாக இணைக்கலாம். அதன்மூலம் எப்போதாவது நிகழக் கூடிய தவறும்கூட நிகழ வாய்ப்பின்றித் தடுக்கலாம்.

இப்படி ஒரு சட்டத் திருத்தம் வந்து திருமண முறையில் நம் நாட்டில் மாறுதல் வந்தால் அதனால் அதிகம் பயன் பெறுவது முதலாவது மகளிரே ஆவர்; அடுத்து பெற்றோர்கள் ஆவார்கள்; அவர்களின் நிம்மதி குலைக்கப்படாது.

சமூகநல ஆர்வலர்களும், சமூக சீர்திருத்த அமைப்புகளும் இதற்காக ஒரு தனி இயக்கமே நடத்திட உடனடியாக முன் வருதல் அவசியம் - அவசரமும்கூட" இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x