Published : 03 Nov 2018 12:07 PM
Last Updated : 03 Nov 2018 12:07 PM

சுகாதார துறை அதிகாரிகளுக்கு சவாலான பன்றி காய்ச்சல்: தமிழகத்தில் 600 பேருக்கு பாதிப்பு; 15 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் மக்கள்தொகை அதிகமாக உள்ள நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் ஹெச்1என்1 வைரஸ் காரணமாக ஏற்படும் பன்றிக் காய்ச்சலின் தாக்குதல் அதிகமாக உள்ளது. பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்துவது பொது சுகாதார துறைக்கு சவாலாகவே உள்ளது. பொது சுகாதார துறை அதிகாரிகள் அளித்த தகவலின்படி, இதுவரை சுமார் 600 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர், 15 பேர் இறந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வருடந்தோறும் அக்டோபர் மாதத்தில் மழைக்கால நோய்களின் தாக்குதல் அதிகரிக்கும். ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் (ஐடிஎஸ்பி) வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 232 பேர் ஹெச்1என்1 வைரஸ் பாதிப்புக்கு உள்ளானது தெரியவந்துள்ளது. அதன், சமீபத்திய தரவுகளின்படி அக்டோபர் 21 ஆம் தேதி வரை 529 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 8 பேர் அந்த காய்ச்சலால் இறந்ததாகவும் தெரிய வருகிறது.

ஆனால், அதிகாரிகள் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கவில்லை என்றே தொடர்ந்து கூறி வருகின்றனர்.

டெங்கு குறைந்தது

பொது சுகாதாரத் துறைஇயக்குநர் குழந்தைசாமி தெரிவிக்கையில், “ கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், வேலூர், சென்னை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்தே இத்தகைய காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால், ஹெச்1என்1 வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது சவாலாகவே உள்ளது” என தெரிவித்தார்.

மருத்துவமனையில் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ளுதல் முக்கிய நோக்கமாக உள்ளது. “மருத்துவமனையில் படிகட்டுகளின் கைப்பிடி, நாற்காலிகள், கதவு கைப்பிடிகள் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என பணியாளர்களை அறிவுறுத்தியுள்ளோம்.

வெளிநோயாளிகளுக்கு காய்ச்சலுக்கு ஏற்றவாறு தனித்தனியாக சிகிச்சை அளிக்க வலியுறுத்தியுள்ளோம். நோயாளிகள், அவர்களை கவனிக்கும் உறவினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருக்கும் தொற்று பரவா வண்ணம் சானிடைசர்கள் மூலம் கைகளை சுத்தமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறோம்” என குழந்தைசாமி தெரிவித்தார்.

கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

கைகளை கழுவுதலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பள்ளிகளில் அதுகுறித்த விழிப்புணர்வு வீடியோக்களை பொது சுகாதார துறை ஒளிபரப்பி வருகிறது. “கை கழுவுதலின் முக்கியத்துவம், காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரை அணுகுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறோம்” என குழந்தைசாமி கூறுகிறார். டெங்கு, பன்றி காய்ச்சல் வந்தவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படியே மாத்திரைகளை உட்கொள்ளுதல் வேண்டும் என சுகாதார துறை கேட்டுக்கொண்டுள்ளது.

காஞ்சி காமகோடி அறக்கட்டளை மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் ஜனனி சங்கர், இதுகுறித்து பயப்பட தேவையில்லை எனவும், மருத்துவர்கள் சொல்லாமல் காய்ச்சலை பரிசோதிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கிறார்.

“ஹெச்1என்1 வைரஸ் ஏ, பி, சி என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. லேசான காய்ச்சல், தொண்டை வலி, இருமல் உள்ளவர்கள் ‘ஏ’ பிரிவு எனலாம். அவர்கள் சோதனை செய்யவோ அதற்கான சிகிச்சை பெற வேண்டிய அவசியமோ இல்லை. ‘பி’ பிரிவில் ஆஸ்துமா, சர்க்கரை நோயாளிகளும், ‘சி’ பிரிவில் சுவாச பிரச்சினை கொண்டவர்களும் உள்ளனர். இவர்களே காய்ச்சல் பரிசோதனையும் சிகிச்சையும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என ஜனனி சங்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x