சிந்து நாகரிகம் வேத காலத்துக்கும் முந்தைய திராவிட நாகரிகம் என்பதை நிறுவியவர்: ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்

சிந்து நாகரிகம் வேத காலத்துக்கும் முந்தைய திராவிட நாகரிகம் என்பதை நிறுவியவர்: ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்
Updated on
1 min read

சிந்து சமவெளி நாகரிகம் வேதப் பண்பாட்டுக் காலத்துக்கும் முந்தைய திராவிட நாகரிகம் என்பதை நிறுவியவர் ஐராவதம் மகாதேவன் என, அவருடைய மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தொல்லியல் துறை  ஆய்வுகள் மூலம் பல்வேறு உண்மைகளை வெளியுலகுக்கு கொண்டுவந்தவரும், 'தினமணி' நாளிழின் முன்னாள் ஆசிரியரும், ஐஏஎஸ் அதிகாரியுமான ஐராவதம் மகாதேவன் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

ஐராவதம் மகாதேவன் எளிமையானவர், பொறுமையானவர், பொறுப்பானவர். அவர் பணியாற்றிய அனைத்து இடங்களிலும் முத்திரைப் பதித்தவர். தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆய்வுகளில் மூலம் சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளுக்கும், தமிழ் எழுத்துகளுக்கும் ஒற்றுமை இருப்பதை சங்ககால இலக்கியங்களின் துணையுடன் நிரூபித்து சிந்து சமவெளி நாகரிகம் வேதப் பண்பாட்டுக் காலத்துக்கும் முந்தைய திராவிட நாகரிகம் என்பதை நிறுவியவர். பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டவர். 

'தினமணி' நாளிதழின் ஆசிரியராக நான்கு ஆண்டு காலத்திற்கும் கூடுதலாக பணியாற்றியவர். இதழியல் அறத்திற்கு உட்பட்டு அந்த நாளிதழை சிறப்பாக நடத்தியவர். அனைத்துத் தரப்பு மக்களும் படிக்கும் நாளிதழாக தினமணியை மாற்றியதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

'தினமணி' நாளிதழ் தமிழ் மணக்கும் நாளிதழாக திகழ்வதற்கு அடித்தளம் அமைத்தவர் ஐராவதம் மகாதேவன் தான். ஐராவதம் மகாதேவனிடம் புதைந்து கிடந்த திறமைகளை தமிழகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவரது மறைவு தமிழுக்கும், தொல்லியல் துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in