Published : 30 Nov 2018 07:31 PM
Last Updated : 30 Nov 2018 07:31 PM

கஜா புயல் நிவாரணம்: ஆமிர் கான் உதவிக்கரம்; கமல்ஹாசன் நன்றி

தமிழகத்தை மிரட்டிவந்த கஜா புயல் கடந்த 16-ம் தேதி நாகை வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் 7 மாவட்டங்களும் பாதிப்புக்குள்ளாகின. கஜா புயல் தாக்கியதால் டெல்டா மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் வரலாறு காணாத பேரழிவு உண்டானது.

30 ஆண்டுகள் அம்மக்கள் பின்னோக்கி சென்றுவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது. முக்கிய தொழிலான தென்னை, பலா, முந்திரி நெற்பயிர் விவசாயம் அடியோடு அழிந்துப்போனது. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தது.

1 லட்சம் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் முழ்மையாக துண்டிக்கப்பட்டு, நிவாரண உதவிகள் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான குக்கிராமங்களில் மக்கள் இன்றும் வாடும் நிலை உள்ளது. வீடிழந்து உணவின்றி, மின்சாரம், அடிப்படை தேவையின்றி வாடும் மக்களுக்கு இந்தியா முழுதுமிருந்து உதவிக்கரங்கள் நீளுகின்றன.

இந்நிலையில் கஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக அமிதாப் பச்சன், ஆமீர் கான் உள்ளிட்டோரிடம் பேசியதாக இன்று காலை கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

அதற்கு உடனடியாகச் செவிசாய்த்திருப்பவர் பாலிவுட் கதாநாயகன் ஆமிர் கான், அவர் தன் ட்விட்டரில் “கஜா புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய பேரழிவு குறித்து நான் கடும் துயரமடைந்தேன்.  துயரத்தில் வாடுபவர்களுக்கு, நம் சகோதர சகோதரிகளுக்கு உதவ நாம் அனைவரும் ஒன்று கூடுவோம். எந்த விதத்திலாவது அவர்கள் துயர் துடைக்க பங்களிப்பு செய்ய முயற்சி செய்வோம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இதனை அங்கீகரித்து கமல்ஹாசனும் “நன்றி ஆமிர் கான் ஜி. உங்களைப் போன்றவர்கள் பல வழிகளில் நாம் ‘ஒரே நாடு’ என்பதை உணரச் செய்கிறீர்கள்” என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x