Last Updated : 23 Nov, 2018 12:47 PM

 

Published : 23 Nov 2018 12:47 PM
Last Updated : 23 Nov 2018 12:47 PM

சேதமடைந்த தென்னை மரத்துக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்ககோரி வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

'கஜா' புயலால் சேதமடைந்த தென்னை மரத்துக்கு தலா 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படும் போது தென்னை மரம் ஒன்றுக்கு 50 ஆயிரம் இழப்பீடு வழங்கியது போல்,  'கஜா' புயலால் சேதமடைந்த தென்னை மரத்துக்கு தலா 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு வருமானம் அளித்து வந்த கால்நடைகள், தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட வாழ்வாதாரங்களை இழந்து நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். புயல் வீசிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர்.

இதனால் 'கஜா' புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 30 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும். அதேபோல் புயலில் காயமடைந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாயையும், ஒரு தென்னை மரத்துக்கு 50 ஆயிரம், நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம், வாழைக்கு ஏக்கருக்கு 2 லட்சம், பிற பயிர்களுக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம், படகு, வலைகளை இழந்து தவிக்கும் மீனவர்களுக்கு 10 லட்சம் ஆகியவற்றை இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், எட்டுவழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தும் போது தென்னை மரம் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது போல், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்திற்கு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள் தென்னை மரத்தோடு, நிலத்துக்கும் சேர்த்து வழங்கப்பட்டது என தெரிவித்தனர். பின்னர் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x