10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 50 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்த நபர்: திருவான்மியூரில் கவனத்தை திசை திருப்பி துணிகரம்

10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 50 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்த நபர்: திருவான்மியூரில் கவனத்தை திசை திருப்பி துணிகரம்
Updated on
2 min read

திருவான்மியூர் அருகே கொட்டிவாக்கத்தில் பைனான்ஸ் தொழில் செய்பவர் கவனத்தை திசை திருப்பி 50 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்துள்ளனர்.

கொட்டிவாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பூமிநாதன் (45). வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று பகல் திருவான்மியூர் மேற்கு குளக்கரை தெருவில் உள்ள இந்தியன் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றார்.

தன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50,000 பணத்தை எடுத்துக்கொண்டு அதைப் பையில் வைத்து தனது சைக்கிளின் ஹாண்டில் பாரில் மாட்டிக்கொண்டு மார்க்கெட் சென்று வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு தனது சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை புத்து கன்னியம்மன் கோயில் அருகில் பூமிநாதன் செல்லும் போது அவரது சைக்கிள் செயினில் துணி சிக்கியதால் சைக்கிள் நின்றுவிட்டது. இதனால் சைக்கிளை நிறுத்திவிட்டு சக்கரத்தின் இடையே சிக்கிய துணியை எடுக்கும் முயற்சியில் பூமிநாதன் ஈடுபட்டார்.

அப்போது ஒரு நபர் அவர் தோளைத்தட்டி சார் பணம் உங்களுடையதா என்று பாருங்கள் என சில அடி தூரத்தில் கிடந்த 10 ரூபாய் நோட்டைக் காண்பித்துள்ளார். நன்றி அய்யா என்று சைக்கிளில் மாட்டியிருந்த துணியை எடுப்பதை விட்டுவிட்டு 10 ரூபாயை எடுக்க பூமிநாதன் சென்றார்.

அப்போது ஒரு நபர் அந்த இடைப்பட்ட நேரத்தைப் பயன்படுத்தி அவருடைய சைக்கிள் ஹாண்டில் பாரில் மாட்டியிருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு தயாராக வந்த மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டார்.

பத்து ரூபாய் லாபம் என சந்தோஷத்துடன் திரும்பிய பூமிநாதன் தனது சைக்கிளில் மாட்டப்பட்டிருந்த பணப்பையை காணாமல் திடுக்கிட்டார். அங்குமிங்கும் தேடினார். ஆனால் பணப்பை போனது எங்கே என்று தெரியவில்லை. தனது பணம் பறிபோனது குறித்து பூமிநாதன் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரது புகாரைப் பெற்ற போலீஸார் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்குள்ள கடை ஒன்றில் கண்காணிப்பு கேமரா பதிவு சிக்கியது. அதில் சைக்கிளுக்கு பத்தடி முன்னால் ஒரு நபர் நிற்பதும், பத்து ரூபாயை எடுக்க பூமிநாதன் செல்வதும், அந்த நேரத்தில் அந்த நபர் சைக்கிள் ஹாண்டில் பாரிலிருந்து பணப்பையை எடுப்பதும் எடுத்தவுடன் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நிற்பதும் அதில் அந்த நபர் பணப்பையுடன் தப்பிச்செல்வதும் பதிவாகியுள்ளது.

பூமிநாதன் வங்கியில் பணம் எடுத்ததைக் கவனித்த கும்பல் அவரைப் பின் தொடர்ந்து வந்து அவரது கவனத்தை திசை திருப்ப சைக்கிள் சக்கரத்தில் துணியை மாட்டவைத்து நிற்க வைத்துள்ளது. அப்போது பின் தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களில் ஒருவர் பூமிநாதனைக் கடந்து நின்றுகொண்டார்.

மோட்டார் சைக்கிள் பூமிநாதனுக்குப் பின்னால் பத்தடி தொலைவில் தயாராக நின்றுள்ளது. மூன்றாவது நபர் பூமிநாதன் துணியை எடுக்கும்போது 10 ரூபாயை கீழே போட்டுவிட்டு தகவல் சொல்லிவிட்டு கடந்து போயுள்ளார்.

பூமிநாதன் பத்து ரூபாயை எடுக்கச் செல்லும்போது காத்திருந்த நபர் பணப்பையை எடுக்க பத்தடி தொலைவில் தயாராக நின்ற பைக் அருகில் வந்து நிற்க எளிதாக தப்பிச் சென்றுள்ளனர். இப்படியா 10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு உள்ள பணத்தை இழப்பீர்கள் என போலீஸார் பூமிநாதனைக் கேட்டுள்ளனர்.

பூமிநாதன் வைத்திருந்த பைக்குள் ரூ. 50 ஆயிரம் பணமும், 2 பாஸ்புக்கும் இருந்தன.

திருவான்மியூர் போலீஸார் வழிப்பறி நபர்களைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in