

இணைய செயலியில் பதிவு செய்யப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தா.கி.ராமச் சந்திரன் தலைமையில் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பணிகள் முறையாக நடை பெறவில்லை, அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை உட்பட கோயில்கள் தொடர்பான கோரிக்கை மனுக்களை பொது மக்கள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் நேரில் அளித்து வந்தனர்.
இவற்றின் மீது அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுப்ப தில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. எனவே, மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்காணிக்கவும், துரிதப்படுத் தவும் இணைய செயலியை உரு வாக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, தேசிய தகவலியல் மையம் மூலமாக இணைய செயலி (web application- http://gdp.tn.gov.in.hrce) உருவாக்கப்பட்டது. இந்த இணைய செயலியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் கடந்த 16-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, பொதுமக்க ளும், சமூக ஆர்வலர்களும் தங்களது கோரிக்கை மனுக்களை இணைய செயலி மூலம் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இணைய செயலியை கண்காணித்து நடவ டிக்கை எடுப்பதை உறுதி செய்ய ஆணையர் தா.கி. ராமச்சந்திரன் தலைமையில் இணை ஆணையர்கள் ஹரிப்ரியா, தன பால் ஆகியோரை உள்ளடக்கிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இணைய செயலியில் தெரிவிக் கப்படும் கோரிக்கைகள், புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய ஆணையரின் நேரடி தலைமையின் கீழ் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இணைய செயலியில் மனுவை பதிவு செய்தவுடன் மனுதாரரின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் மனு பெறப் பட்டதை உறுதி செய்து குறுஞ் செய்தி அனுப்பப்படும். ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் மனுக்களை சம்பந்தப் பட்ட அதிகாரிக்கு அனுப்பி வைப்பார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரி 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆணையருக்கும், சம்பந்தப்பட்ட மனுதாரருக்கும் தெரிவிக்க வேண்டும்.
இதன் மூலம், பொதுமக்களின் எந்த மனுவையும் எந்தவொரு அதிகாரியும் நிராகரிக்க முடியாது. மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பது உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.