Published : 04 Nov 2018 12:46 AM
Last Updated : 04 Nov 2018 12:46 AM

நியூட்ரினோ திட்டத்துக்கு விதிக்கப்பட்டது தடையா, நிபந்தனையா?- பசுமை தீர்ப்பாய உத்தரவும்.. சட்ட அனுமதிகளும்..

முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், முனைவர் டி.ஆர்.கோவிந்தராஜன்

நியூட்ரினோ திட்டத்துக்கு இடைக்காலத் தடை என்கின்றன ஊடகங்கள். அந்த தலைப்பை பார்த்தபோது அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்ன ‘மாற்று மெய்கள்’ எனும் கருத்துதான் நினைவுக்கு வந்தது.

அமெரிக்க வரலாற்றில் அதுவரை பதவியேற்ற அதிபர்களின் பதவியேற்பு விழாக்களில் பங்கேற்ற மக்களைவிட டிரம்ப் பதவியேற்றபோது அதிகமான மக்கள் பங்கெடுத்தனர் என்ற அப்பட்டமான பொய்யை வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ழான் ஸ்பைசர் சொன்னார். அதுபற்றி விமர்சனங்கள் வந்தபோது, ‘மெய்கள் மட்டுமல்ல; மாற்று மெய்கள்’ இருக்கின்றன என்று டிரம்ப் ஆதரவாளர்கள் பூசி மெழுகினர். அதுதான் நினைவுக்கு வந்தது.

அனுமதி பெற்ற முறை சட்டவிரோதம், அனுமதி வாங்கிய பிரிவில் குறை உள்ளது. எனவே, நியூட்ரினோ திட்டத்துக்கு வழங்கியசுற்றுச்சூழல் அனுமதியை செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பசுமை தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் அனுமதி அளித்ததில் எந்த முறைகேடும் இல்லை என்று கூறி வழக்கை நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்திருக்கிறது. 

எனவே, இந்த ‘இடைக்கால தடை’ என்று ஊடகங்கள் கூறுவதைமாற்று மெய் அல்லது பொய் என்று கூறலாம்.

பின்னணி

எந்த ஒரு பெரும் திட்டத்துக்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும். எல்லா திட்டங்களுக்கும் முதலில் 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சட்டத்தின் [Environmental Impact Assessment - EIA Act] படி சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும். உள்ளபடியே, 2011-ம் ஆண்டிலேயே இத்தகைய அனுமதியை இத்திட்டம் பெற்றுவிட்டது. ஆனாலும், இதற்கிடையில் இத்திட்டம் நடைபெற வேண்டியபகுதிக்கு அருகே மதிகெட்டான்சோலை தேசியப் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்கா 5 கி.மீ.தொலைவுக்குள் அமைந்துவிடுகிறது என்பதால் பசுமை தீர்ப்பாயம் ஏற்கெனவே பெற்ற அனுமதியை தற்காலிகமாக நிறுத்திவைத்து மறுபடியும் சூழல் அமைச்சகத்தின் அனுமதியை புதிதாக பெறும்படியும், கூடுதலாக வனவிலங்கு வாரிய அனுமதியையும் பெறுமாறு 2017 மார்ச்சில் தீர்ப்பளித்தது.

பின்னர் திட்ட இயக்குநர்கள் இந்த இரு அனுமதிக்கான விண்ணப்பத்தை புதிதாக அளித்தனர். EIA சட்டத்தின்படி மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் (TamilNadu State Environmental Impact Assessment Authority -SEIAA) 2017 ஜூனில் விண்ணப்பம் செய்தனர். 

விண்ணப்பத்தை பரிசீலித்து அனுமதி அல்லது மறுப்பு வழங்கும் அதிகாரம் இருந்தும், தமக்கு போதிய நிபுணத்துவம் இல்லை எனக் கூறி இந்த விண்ணப்பத்தை மத்திய அமைச்சகமே ஆய்வு செய்து முடிவை எடுக்கட்டும் என மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியது. அதன் அடிப்படையில் மத்திய அமைச்சகம் இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, கடந்த மார்ச் 5-ல் மத்திய சூழல்துறை சூழல் அனுமதி நல்கியது.

வழக்கு

இந்த பின்னணியில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, மாநில அரசுக்கு மட்டுமே அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ளது; மேலும் இந்த அனுமதி வழங்கிய பிரிவும் பிழை என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது.

மாநில அரசின் கருத்து, பூவுலகின் நண்பர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கூற்று எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு மத்திய சூழல் துறை பரிசீலிக்க வேண்டும் என்று மாநில அரசே முன்வந்து கூறியுள்ளதால் எந்த முறைகேடும் இல்லை என்று கூறி  வழக்கு கடந்த 2-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தபோதே சில நிபந்தனைகளை விதித்தது. குறிப்பாக நியூட்ரினோ திட்ட நிர்வாகம் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கட்டுமான அனுமதிபெற வேண்டும் என கூறுகிறது. மதிகெட்டான் பறவைகள் சரணாலயம் அருகே உள்ளதால் தேசிய வனவிலங்கு வாரியத்திடமும் அனுமதி பெறவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திட்டத்துக்கு எடுக்கப்படும் நீரின் அளவு, அப்பகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய மழைநீர் சேகரிப்பு திட்டங்கள், நிலத்தடிநீர் பாதுகாப்பு, கழிவுமேலாண்மை, எரிசக்தி பயன்பாடுமற்றும் காற்றின் தரம் உள்ளிட்ட அம்சங்களை கையாளவேண்டிய வழிமுறைகள் குறித்தும் நிபந்தனைகளை விதித்துதான் அனுமதிவழங்கியுள்ளது.  

பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகளும் தேசிய வனவிலங்கு வாரிய அனுமதி பெற்றுதான் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளனர். புதிதாக ஏதும்இல்லை. சட்டரீதியான அனுமதிகளை பெற்ற பின்னரே கட்டுமானதிட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும் என திட்ட நிர்வாகிகள் உறுதிகூறுகின்றனர். சட்டத்தின்படி இவை அவசியமும் ஆகும்.

போலி அறிவியல்

எந்த ஒரு வெடி வெடிப்பின்போதும் எழும் அதிர்வுகள் ‘தலைகீழ் இருமடி விகித’ அடிப்படையில், தொலைவு செல்லச் செல்லஅதிர்வின் வீச்சு மங்கும். அதேபோல இந்த திட்டம் செயல்படுத்த அமைக்கப்போகும் குகை பாதையின்போது வெடிக்கப்படும் வெடிகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் 500 மீட்டர் தாண்டி நொடிக்கு ஒரு மில்லிமீட்டர் என்ற அளவில் மட்டுமே இருக்கும். ஆயினும், இந்த அதிர்வுகள் பல கி.மீ. தொலைவில் உள்ள அணைகளை பாதிக்கும் என எந்த அறிவியல் ஆதாரமும் இன்றி போலியாக அச்சமூட்டி வருகின்றனர்.

பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கை உண்மையில் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அந்த தீர்ப்பை ‘இடைக்கால தடை’ என்று கூறுவதும், போலியாக பீதியூட்டும் போக்கின் ஒரு பகுதியே.

மதுரையில் ஆய்வு மையம்

தூணிலும் துரும்பிலும் எங்கும் நீக்கமற பரவியுள்ள துகள்தான் நியூட்ரினோ. 3 வகை நியூட்ரினோக்களில் நிறை கூடியது எது,குறைந்தது எது என்றும், இதற்கு ஆன்டி (எதிர்ம) துகள் உண்டா, இல்லையா என்றும் இந்திய நியூட்ரினோ நோக்குகூடம் ஆராய்ச்சி செய்யும். மதுரையில் உள்ள உயர்ஆற்றல் துகள்கள் குறித்த ஆய்வுக்கான இணைப்பு நிறுவனத்தில் ஏற்கெனவே உணர்விக் கருவியின் சிறு அளவு கருவி வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிவருகிறது. இந்திய விஞ்ஞானிகள்,தொழில்நுட்ப பொறியாளர்கள்,மாணவ, மாணவிகள் சேர்ந்துஇதை முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கி வருகின்றனர்.

பல கல்லூரிகள், பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் இந்தஆய்வு நிறுவனத்தை வந்து பார்த்து அனுபவம் பெற்றுவருகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி, தேசிய அளவில் உயர் கல்வியில் பெரும் தாக்கத்தையும் நுண்தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் நியூட்ரினோ திட்டம் வழிவகுக்கும்.

‘மாற்று மெய்கள்’ என்கிற பொய்கள் ஒருபோதும் மெய்கள் ஆகாது!

எல்லா நடைமுறைகளும் பின்பற்றப்படும்: இயக்குநர் உறுதி

நியூட்ரினோ திட்டம் தொடங்குவதற்கு முன்பு, அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி, உரிய துறைகளில் முறையாக அனுமதி பெறப்படும் என்று நியூட்ரினோ திட்ட இயக்குநர்  விவேக் தாதர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

நியூட்ரினோ திட்டத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருப்பதுபோல செய்திகள் வெளியாகின்றன. ஆனால், பசுமை தீர்ப்பாயம் நியூட்ரினோ திட்டத்துக்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை.

இத்திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஏற்கெனவே வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை பசுமை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தும் முன்பு கூடுதலாக, தேசிய வனவிலங்கு வாரியத்திடமும் அனுமதிபெறுமாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்ட அனுமதி பெறுவதற்கான நடைமுறைகளில் கூறியுள்ளபடி, ஓராண்டுக்கு முன்பே, தேசியவனவிலங்கு வாரியத்திடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கிறோம். சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு உரிய அனுமதி பெறுவதில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம்.

அதனால், சுற்றுச்சூழல், வனம், வன விலங்கு தொடர்பான அனைத்து அனுமதியையும் பெற்ற பிறகு, இறுதியாக திட்டம் தொடங்குவதற்கான இசைவாணை பெற தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்க இருக்கிறோம். அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்ட பிறகுதான் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x