

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சந்தித்தார். பிரதமர் அறிவித்துள்ள வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு (ஜன் தன்) திட்டத்தை தொடங்கிவைப்பதற்காக ரவி சங்கர் பிரசாத் சென்னை வந்திருந்தார்.
முதல்வருடனான 40 நிமிட சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்: "முதல்வருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது. பிரதமரின் வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு (ஜன் தன்) திட்டத்தை முதல்வர் ஜெயலலிதாவிடம் விரிவாக எடுத்துரைத்தேன். எலக்ட்ரானிக் உபகரணங்கள் தயாரிப்புக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை தமிழக் அரசு பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தினேன்" என கூறினார்.
பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப் பற்றியும் முதல்வரிடம் விளக்கியதாக கூறினார். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பிராட் பேண்ட் வசதி செய்துதர திட்டமிட்டிருப்பதாக கூறினார். முதற்கட்டமாக இந்த ஆண்டு 60,000 பஞ்சாயத்துகளுக்கும், அடுத்த ஆண்டு 1 லட்சம் பஞ்சாயத்துகளுக்கும். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும், 1 லட்சம் பஞ்சாயத்துகளுக்கும் பிராட் பேண்ட் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
தமிழகத்தில் தொழில்நுட்ப பயன்பாடு சிறப்பாக இருப்பதால், பிரதமரின் கனவு திட்டத்தை தமிழக அரசு வெற்றியடையச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.