Published : 15 Nov 2018 04:26 PM
Last Updated : 15 Nov 2018 04:26 PM

‘கஜா’ புயல்: 10 முக்கிய தகவல்கள்

‘கஜா’ புயல் நாகை அருகே இன்று இரவு கரையை கடக்கவுள்ள நிலையில் அதுகுறித்து 10 முக்கிய தகவல்கள் வருமாறு:

 

1) மாலை நேர நிலவரப்படி ‘கஜா’ புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. நாகைக்கு 187 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புயல் 22 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

 

2) கஜா’ புயல் இன்று இரவு 8 மணியில் இருந்து 11 மணிக்குள் நாகை அருகே கரையை கடக்கும் என தேசிய பேரிடர்  மேலாண்மை ஆணையம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. நாகை, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், திருவாரூர் மற்றும் புதுச்சேரியின் கரைக்கால் மாவட்டங்களில் பரவலமாக கன மழையும், ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யும்

 

3) வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் 22 கிலோ மீட்டர் வேகத்தில்  பயணித்து வருவதாகவும், இன்று இரவு நாகை அருகே கரையைக் கடக்கும்போது ஒரு சில இடங்களில் 20 செ.மீ. வரை மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

4) நாகர்கோயிலில் 3 செ.மீ மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் ஆய்க்குடியில் 2 செ.மீ மழையும், பேச்சிபாறை, தென்காசி, சிவகிரி, மாதவரம் ஆகிய இடங்களில் ஒரு செ.மீ மழை பெய்துள்ளது.

 

5) ‘கஜா’ புயல் காரணமாக நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

 

6) புயல் கரையை கடக்கும்போது 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் கடந்து செல்லும் பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் நிறுத்தப்படும்.

 

7) 'கஜா' புயல் இன்று கரையைக் கடக்கும் நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் 4 மணிக்கே வீட்டுக்குச் செல்ல அரசு அறிவுறுத்தியது.

 

8) புயல் பாதிக்கும் பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளுக்காக அவசர கால தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

9) கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், செல்பி ஆர்வலர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

10) நாகை, கடலூர் துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x