அரசு சேவை தாமதமின்றி கிடைக்க அம்மா மக்கள் சேவை மையம் : பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அரசு சேவை தாமதமின்றி கிடைக்க அம்மா மக்கள் சேவை மையம் : பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
Updated on
2 min read

பொதுமக்களுக்கு அரசு சேவைகள் தாமதமின்றி கிடைப்பதற்காக புதன்கிழமைதோறும், ‘அம்மா மக்கள் சேவை மையம்’ நடத்தப்படும் என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பேரவை விதி 110-ன் கீழ் வெள்ளிக்கிழமை சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அலுவலர்கள் அலுவல் நிமித்தமாக வெளியிடங்களுக்கு சென்றுவிடும் நேரத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அலுவலர்களை சந்திக்க இயலாமல் போய் விடுகிறது.

இந்த இடர்பாட்டை தவிர்க்க, வாரத்தில் ஒருநாள் மாநகராட்சி களில் உள்ள மண்டல அலுவலகங் களிலும், நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் பிறப்பு, இறப்பு சான்றிதழ், வர்த்தக உரிமம், பாதாள சாக்கடை குழாய் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, தொழில் வரி விதிப்பு, சொத்து வரி கேட்பு, கட்டிட அனுமதி, பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு சான்றிதழ் ஆகியவை கோரும் விண்ணப்பங்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், ‘அம்மா மக்கள் சேவை மையம்’ நடத்தப்படும்.

இந்த மையத்தில், ஒவ்வொரு புதன்கிழமையும் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முறையே உதவி ஆணையாளர்கள், ஆணையர்கள், செயல் அலுவலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது ஆய்வு செய்து, மக்கள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால வரையறைக்கு ஏற்ப ஆணை வழங்க நடவடிக்கை எடுப்பார்கள்.

அனைத்து விண்ணப்பங் களையும் கணினியில் பதிவு செய்து, ஒவ்வொரு கோரிக்கை மனுவுக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முறையான பதில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இப்பணி முறையாக நடப்பதை உறுதி செய்ய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அந்தந்த துறைத் தலைவர்கள் வலைதளம் மூலம் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். இதன்மூலம் அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு காலவிரயம் இல்லாமல் குறைந்த செலவில் சென்றடைவது உறுதி செய்யப்படும்.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி கடன்

நடப்பாண்டில் சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வங்கிக் கடன் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பேரவை விதி 110-ன் கீழ் வெள்ளிக்கிழமை சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 3 ஆண்டுகளில் 2.37 லட்சம் சுய உதவிக் குழுக்கள் ரூ.14,097 கோடி கடனுதவி பெற்றுள்ளன. நடப்பாண்டில், சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வங்கிக் கடன் கிடைக்க வழிவகை செய்யப்படும். இதன்மூலம் 2.5 லட்சம் சுய உதவிக் குழுக்கள் பயனடையும்.

கடன் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்து வதுடன் வங்கிக் கடன் திருப்பி செலுத்தும் பணிகளை நிர்வகிக்க சமுதாய வங்கி ஒருங் கிணைப்பாளரின் சேவை அவசியம் என்பதால், ஒவ்வொரு பகுதிக்கும் தலா 4 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

நடப்பாண்டில், 2 ஆயிரம் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். சுய உதவிக் குழு உறுப்பினர்களில் இருந்து தேர்வு செய்யப்படும் இந்த ஒருங்கிணைப் பாளர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

இவர்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கும், வங்கிகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு கல்விக் கடன் வசதி, வங்கிக் கடனை திருப்பி செலுத்துதல் மற்றும் காப்பீடு பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in