Published : 18 Nov 2018 04:16 PM
Last Updated : 18 Nov 2018 04:16 PM

கஜா புயல் பாதிப்பு; இதுவரை நேரில் பார்வையிடாதது ஏன்?-  முதல்வர் பழனிசாமி பேட்டி

செவ்வாய்க்கிழமை காலை சென்று கடலோர மாவட்டத்திலே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் செல்ல இருக்கின்றேன் என்று முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

இது தொடர்பாக சேலத்தில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட முதல்வர் வரவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய பயணம் எப்போது?

இன்றைய தினம் நான் செல்லலாம் என்று இருந்தேன். இன்றைய நிகழ்ச்சி கிட்டத்தட்ட மாலை வரை நீடித்திருக்கும் காரணத்தினாலே இங்கிருந்து கிட்டத்தட்ட 350 கிலோ மீட்டர் நாகப்பட்டினம், நாகப்பட்டினம் மட்டுமல்ல கடலோர மாவட்டத்திலே பெரும்பாலான இடத்திலே புயலால் சேதம் அடைந்திருக்கிறது. அதையெல்லாம் பார்வையிட ஒரு நாள் முழுவதும் வேண்டும். ஏற்கெனவே இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது.

இந்தப் புதிய பாலம் திறப்பு விழா மற்றும் நாமக்கல் மாவட்டத்திலே புதிய கட்டிடத் திறப்பு விழா, மருத்துவமனையிலே மருத்துவக் கருவி தொடக்க விழா, இப்படி என்று பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து விட்டார்கள். அந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, அங்கு புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை எல்லாம் பார்வையிட காலநேரம் போதாது என்ற காரணத்தினாலே இன்றைய தினம் செல்வதை தவிர்த்து, செவ்வாய்க்கிழமை காலை சென்று கடலோர மாவட்டத்திலே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் செல்ல இருக்கின்றேன்.

மத்திய குழுவிடம் ஏதாவது கேட்டிருக்கிறீர்களா?

மத்திய குழுவிற்கு இப்போது சேதம் மதிப்பீடை தயார் செய்து கொண்டு இருக்கின்றோம். இன்றைக்கு கடுமையான சேதம். நாம் சாலைகள் வழியாக தான் பார்த்தோம். ஆனால் கிராமப்புறங்களில் இருக்கின்ற மரங்கள் எல்லாம் சாய்ந்து விட்டன. விவசாயிகளுடைய வாழ்வாதாரமே சீர்குலைந்து விட்டது. அவர்கள் பயிரிட்ட நெற்பயிர், வாழை, தென்னை, இப்படி பயிர்கள் எல்லாம் அந்த புயல் காற்றால் ஒடிந்து சேதம் அடைந்துவிட்டன. அதை எல்லாம் கணக்கிடுகின்ற பணி நடைபெறுகிறது. இந்தப் புயலினால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல கால்நடைகளைப் பொறுத்தவரைக்கும், ஆடு, மாடுகளை பொறுத்தவரைக்கும் 735 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

வீடுகள் சேதம், கடும் புயலினால் கடலோர மாவட்டங்களில் சேதம் அடைந்த வீடுகளின் எண்ணிக்கை 1,17,624. அதேபோல, இந்த கடும் புயலினால் ஒடிந்து சாய்ந்த மரங்கள் 1,70,454. இதுவரை சாலைகளில் சாய்ந்து ஒடிந்த மரங்கள் அகற்றப்பட்டவை 33,868 மரங்கள். பயிர் சேதத்தைப் பொறுத்தவரைக்கும் 88,102 ஹெக்டேர் இந்த புயலினால் பயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, அங்கே மீட்பு முகாம்கள் 483 முகாம்கள் இன்றைக்கு செயல்பாட்டில் இருக்கின்றன. அதில் தங்கி இருக்கின்ற   மக்களுடைய எண்ணிக்கை 2,49,083 பேர். அவர்களுக்கு உணவு, சுகாதாரம், அனைத்து வசதிகளும் அரசு செய்து கொடுக்கிறது.

372 மருத்துவ முகாம்கள் அங்கே வைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே கிராமங்களுக்குச் சென்று எவ்வித தொற்று நோயும் ஏற்படாதவண்ணம் அவர்களை பாதுகாப்பதற்காக 1014 நடமாடும் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த மருத்துவமனைகளை நாடி சிகிச்சை பெற்றுள்ளனர்.

மின்சாரத்துறையைப் பொறுத்தவரைக்கும் இந்தக் கடும் புயலினால் கிட்டத்தட்ட 39,938  மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. மின்மாற்றிகள் 347 சேதம் அடைந்திருக்கின்றன. இந்த சேதம் அடைந்த மின்கம்பங்களை எல்லாம் நிறுவுவதற்காக தமிழ்நாடு மின்சார பணியாளர்கள் 12,532 பேரை அனுப்பி வைத்திருக்கின்றோம். அவர்களோடு மின்சார வாரியத்தின் உயர் அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், முதல்நிலை மீட்பாளர்கள் 14,204 பேர் அந்தப் பகுதிகளிலே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதோடு பல்துறை மண்டல குழுக்கள் 175 அமைக்கப்பட்டு அவர்கள் அந்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தரப்பினர் தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுடைய ஒத்துழைப்பு, மீட்பு பணிகளில் அவர்களுடைய ஒத்துழைப்பு ஏதாவது கேட்க வாய்ப்பு இருக்கிறதா?

இது இயற்கை. இயற்கை நமக்கு இவ்வளவு பெரிய சோதனையை நமக்கு தந்துவிட்டது. இதை மனிதாபிமான முறையிலே அனைவரும் நாடவேண்டும். இதில் எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்ற பாகுபாடே இருக்க கூடாது. அதுமட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களே, இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதுதான் மனிதாபிமான செயல்.  மக்கள் பாதிக்கப்படுகின்ற போது, நம் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் எப்படி மனநிலை ஏற்படுமோ அதைபோல் கருதி அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை அனைவரும் செய்ய வேண்டும்.

குடிநீர் கிடைக்கவில்லை என்று பல்வேறு இடங்களிலே மக்கள் போராட்டம் நடைபெறுகிறதே?

அப்பொழுது முகாமில் குறைந்த அளவுதான் தங்கியிருந்தார்கள். முகாம்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. கிராமப் பகுதிகளில் நிறைய மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை ஒரு நாளில் சரிசெய்வது கடினம். ஒரு மின்கம்பம் நிறுவ எவ்வளவு நேரம் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். வயல்வெளிகளில் சாய்ந்துள்ள மின்கம்பங்களை, கிட்டத்தட்ட 1000 அடி சென்றுதான் அவற்றை நிறுவ வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது. மின்கம்பங்கள் முழுவதும் நடப்பட்டு, கம்பிகள் இழுக்கப்பட்ட பிறகு தான் மின்சாரம் கொடுக்க முடியும் என்ற சூழ்நிலையில் ஆங்காங்கே பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இருக்கும் மக்கள் இன்றைக்கு அதிக அளவில் முகாம்களில் வந்து தங்கியிருப்பதால் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும், குடிநீரைப் பொறுத்தவரை, ஆங்காங்கே ஜெனரேட்டர் வைத்து பம்ப்செட்டை இயக்கி வழங்கிக் கொண்டிருக்கின்றோம். சாலைகளில் பார்க்கும்பொழுது, குறைவாக இருப்பதுபோல் தெரிந்தது, கிராமப்புறங்களில் சென்று பார்க்கும்பொழுது அதிகமான மரங்கள் ஒடிந்து, சாய்ந்திருக்கின்றன. கிட்டத்தட்ட பல லட்சம் மரங்கள் ஒடிந்து சேதமடைந்துள்ளது. விளைநிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளது. இவற்றையெல்லாம் கணக்கிடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கிராமப்புறங்களின் உள் சென்று பார்க்கும்பொழுது கணக்கீடு அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இன்றுவரை கொடுக்கப்பட்டுள்ள கணக்கைதான் இப்பொழுது சொல்லியிருக்கின்றோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 65 சதவீதத்திற்கு மேல் மின்கம்பங்கள் ஒடிந்துவிட்டதாக தகவல் கிடைக்கிறது. முழுமையான விவரங்கள் தெரிவதற்கு கணக்கீடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்பிறகு தான் முழுமையான விவரங்கள் தெரியும். அதனடிப்படையில்தான் நாங்கள் நிவாரணம் அளிக்க முடியும்.

நாங்கள் மத்திய அரசுக்கு ஏற்கனவே சேதம் அடைந்த விவரங்களை அளித்திருக்கின்றோம். முழுவதுமாக சேத மதிப்பீட்டை கண்டறிந்த பிறகுதான் மத்திய அரசுக்கு அனுப்பி நிவாரணம் பெற முடியும். அதுமட்டுமல்ல, கடலோர மாவட்டங்களில் கடுமையாக புயலாக பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய பேரிடர் குழு நேரில் பார்வையிட்டு சேத மதிப்பீட்டை கணக்கிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளோம்.

மரங்கள் முறிந்து சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதினால் ஹெலிகாப்டர் மூலமாக நிவாரணப் பொருட்கள் வழங்க ஏதேனும் ஏற்பாடு செய்யப்படுமா?

சாலையில் ஒடிந்த விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து செல்லும் அளவிற்கு சாலைகள் சரிசெய்யப்பட்டு விட்டது. இன்று மாலைக்குள் 100 சதவீத போக்குவரத்து இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கின்றார். அதுமட்டுமல்ல, காவிரியிலிருந்து செல்கின்ற ஜி.ஏ. கேனலில் மட்டும் 3600 மரங்கள் சாய்ந்துள்ளன. வனத்துறை மூலமாக நடப்பட்ட 7000 மரங்கள் சாய்ந்துள்ளன. கால்வாயில் மட்டும் 10000 மரங்கள் சாய்ந்துள்ளன.  தண்ணீர் வேறு சென்று கொண்டிருக்கிறது. தண்ணீரை நிறுத்தினால் பாசனம் கெட்டுப் போய்விடும். இதற்கிடையில் ஆட்களை வைத்து 10,000 மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மீட்புப் பணிகளுக்கு ராணுவம் கேட்பீர்களா?

மீட்புப் பணியை பொறுத்தவரைக்கும், நம்முடைய மாநிலத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.  இன்றையதினம் நம்முடைய அமைச்சர் பெருமக்களும் அங்கே செல்ல இருக்கின்றார்கள். நாம் அந்த நிலவரத்தையெல்லாம் கண்டறிந்து தேவைப்பட்டால், மத்திய அரசினுடைய அதிகாரிகளையும் வரவழைத்து, அந்த மீட்புப் பணிகளுக்குண்டான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  ஏனென்றால், மரத்தை அப்புறப்படுத்தவதும்,  மின்கம்பங்கள் நடுவதும் தான்  நமக்கு ஒரு சவாலாக இருக்கிறது. இவை இரண்டையும், வேகமாக, துரிதமாக செயல்படுத்துவதற்குண்டான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x