

‘சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும் பாடு’ என்ற தலைப்பில், திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், திமுக தலைவர் கருணாநிதி உரையாற் றினார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பேசவும், ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வரவும், திமுக எம்.எல்.ஏ.க்கள் முயற்சித்தனர். இதுதொடர்பான அவை நடவடிக்கையின் போது, திமுக எம்.எல்.ஏ.க்கள் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டனர். மேலும் நடப்புக் கூட்டத் தொடரின் மீதமுள்ள நாட்களில், அவை நடவடிக்கைகளில் திமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க, அவைத்தலைவர் தனபால் கடந்த ஜூலை 22ம் தேதி தடை விதித்தார்.
இதைக் கண்டித்து, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, வியாழக்கிழமை இரவு, சென்னை தி.நகர் பேருந்து நிலையம் அருகில் தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில் கூட்டம் நடந்தது. கே.ஏழுமலை, ஜெ.கருணாநிதி ஆகியோர் வரவேற்றனர். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் உரையாற்றினர்.