

சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு விழா வளைவைத் திறக்கத் தடைவிதித்த நீதிபதிகள் அமர்வு அரசின் போக்கு குறித்து வேதனை தெரிவித்தனர்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஓட்டி மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நூற்றாண்டு விழா வளைவு அமைக்கும் பணி நடைபெற்று திறக்கும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் வழக்கறிஞர் தினேஷ்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவரது கோரிக்கையில் “கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர், துணை முதல்வர் இந்த எம்ஜிஆர் நினைவு வளைவு கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தனர். தேசிய நெடுஞ்சாலை விதிகளுக்கு மாறாகவும், மாநில சட்ட விதிகளுக்கு மாறாகவும் மெரினா கடற்கரைச் சாலையில் நினைவு வளைவு அமைக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் இது பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையை மறித்து அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இதே சாலையில் சிவாஜி கணேசன் சிலை இதேபோன்று காரணங்களுக்காக அகற்றப்பட்டது. இவ்வாறு நினைவு வளைவு அமைக்கப்படுவது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது, விதிகளுக்கு புறம்பாக கட்டப்படும் இந்த வளைவின் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு பொது நல வழக்காக உள்ளது. கட்டுமானப் பணிகளில் அரசு ஏன் இவ்வளவு தீவிரமாக உள்ளது.
பல்வேறு பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான உரியவர்களுக்கு உரிய இழப்பீடுகள் கிடைக்காமல் இன்றளவும் தாமதப்படுகிறது. ஆனால் ஆண்டுக்கணக்காக அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்காமல் இருக்கிறது. ஆனால், இதுபோன்ற திட்டங்களில் ஏன் அரசு இவ்வளவு அவசரம் காட்டுகிறது. திட்டங்கள் அரசின் நிதி நிலையைக் கணக்கில் கொண்டு அமைய வேண்டும், ஆனால் அரசின் கொள்கை முடிவு என்று ஏன் இவ்வளவு முனைப்பு காட்டப்படுகிறது என்று கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவு அமைக்கப்பட்டு வரும் இடம் நெடுஞ்சாலை சட்டத்தில் வராது என்றும், சென்னை மாநகராட்சி சாலையாகத்தான் கருதமுடியுமென தெரிவித்தார்.
மேலும் வளைவுக்கான கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டதாகவும், அடுத்த மாதத்தில் திறப்புவிழா நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சட்டப்பேரவை வைரவிழா வளைவுக்கான நடைமுறைகளைப் பின்பற்றியே எம்.ஜி.ஆர். வளைவுக்கும் அனுமதி பெறப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, நெடுஞ்சாலை சட்டத்தில் வராது, சென்னை மாநகராட்சியில் வருமென்றால் மாநகராட்சி சாலை என்பது இருபுறமும் உள்ள நடைபாதையை சேர்த்துதான் வருமென அறிவுறுத்தினர். அப்படி பார்த்தால் சென்னை மாநகராட்சி சட்டத்தின்படி எம்.ஜி.ஆர். வளைவையும் நடைபாதை ஆக்கிரமிப்பாகத்தான் கருதவேண்டுமெனக் கூறினர்.
சட்டப்பேரவை வைர விழா ஆர்ச் உள்ள பகுதியில் நடைபாதை பயன்பாடு அதிகமில்லை என்றும், அதனால் வைரவிழா வளைவுடன் எம்.ஜி.ஆர். வளைவை ஒப்பிட முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
மேலும், 1977 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை நில கையகப்படுத்தும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு 850 கோடி ரூபாய் கொடுக்க உத்தரவிட்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை, கொள்கை முடிவு எடுக்கவில்லை என்ற காரணங்களால் இழப்பீட்டை கொடுக்காமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 40 அண்டுகளாக வெற்றிபெற்று ஆட்சி அமைப்பவர்களால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருவதாக நீதிபதிகள் குற்றம் சாட்டினர். அரசுத் தரப்பில் கூட்டங்கள் மட்டும் நடத்தப்படுவதாகவும், ஆனால் எந்த ஆக்கப்பூர்வமான முடிவும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை எனவும் குற்றம் சாட்டிய நீதிபதிகள் உங்களது வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது என குற்றம் சாட்டினர்.
வழக்கு குறித்து தமிழக அரசு, பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிச. 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதேசமயம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு கட்டுமானப் பணிகளை முடித்தாலும், வழக்கு முடியும் வரை திறக்கக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டனர்.