மாணவர்கள் களமிறங்கினால் வாழையை காப்பாற்றலாம்: வேளாண் விஞ்ஞானி பரசுராமன் யோசனை

மாணவர்கள் களமிறங்கினால் வாழையை காப்பாற்றலாம்: வேளாண் விஞ்ஞானி பரசுராமன் யோசனை
Updated on
1 min read

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வேளாண் கல்லூரி, தோட்டக்கலை கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் களமிறங்கி மறுநடவு பணியில் ஈடுபட்டால், பெரும்பாலான வாழை மரங்களை காப்பாற்ற முடியும் என்று வேளாண் விஞ்ஞானி பரசுராமன் கூறியுள்ளார்.

‘கஜா’ புயலால் திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட 12 மாவட் டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில், 32,706 ஹெக்டேர் நெல் பயிர், 30,100 ஹெக்டேர் தென்னை மரங்கள், 7,636 ஹெக்டேர் மக்காச்சோளம், 4,747 ஹெக்டேர் வாழை, 4 ஆயிரம் ஹெக்டேர் காபி பயிர், பயறு, பருத்தி, பலா மரங்கள் சேதம் அடைந்துள்ளன. 3,253 ஹெக்டேர் முந்திரி, 500 ஹெக்டேர் கரும்பு, 945 ஹெக்டேர் மா மரங்கள், 2,707 ஹெக்டேர் காய்கறி பயிர்களும் சேதம் அடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் மறுசாகுபடிக்கு பயிர்வாரியான நிவாரணத் தொகையையும் அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசியத் தேவைகளான குடிநீர், மின்சாரம் வழங்க பிற மாவட்ட பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு துரிதமாக வேலை நடக்கிறது. அதேநேரம், பாதிக்கப்பட்ட விவசாயப் பயிர் களை மீட்டெடுப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த சேதத்தை சரிசெய்வது குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை வேளாண் விஞ்ஞானி என்.பரசுராமன் கூறியதாவது:

‘கஜா’ புயலால் விவசாயப் பயிர் கள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். இந்த சூழலில், வாழை, மா போன்ற பயிர்களை மறுநடவு செய்ய வேளாண் கல்லூரி, தோட்டக்கலை கல்லூரி மாணவ, மாணவிகளைப் பயன்படுத்தலாம். இதனால், 75 சதவீத வாழை மரங்கள் மீட்டெடுக்கப்படுவதுடன், மாணவ, மாணவிகளுக்கு நேரடி கள அனுபவமும் கிடைக்கும்.

திருச்சி, தஞ்சை, புதுக்கோட் டையில் மட்டும் 5 வேளாண் கல்லூரிகள், ஒரு தோட்டக்கலை கல்லூரி உள்ளன. இதுதவிர, மதுரை, பெரியகுளம், தேனி உள் ளிட்ட பல இடங்களில் வேளாண் கல்லூரி, தோட்டக்கலை கல்லூரி கள் இருக்கின்றன. ஒவ்வொரு கல்லூரியிலும் சுமார் 500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர் கள் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை களப்பணியாக விவசாய வேலைகளை செய்ய வேண்டும். இந்த மாணவர்களைக் கொண்டு, புயல் பாதித்த மாவட் டங்களில் வாழை, மா போன்ற பயிர்களை அறிவியல்ரீதியாக மறுநடவு செய்யலாம்.

‘கஜா’ புயல் பாதித்த மாவட் டங்களில் மறுநடவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள அரசு, தனியார் வேளாண் கல்லூரிகள், தோட்டக்கலை கல்லூரிகளுக்கு முறையான உத்தரவு பிறப்பித்தால், அதிகபட்சம் 5 முதல் 10 நாட்களில் வெற்றிகரமாக இப்பணியை செய்து முடிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in