

நெல் ஜெயராமனை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன், 'நான் உங்க புள்ள மாதிரி' என்று கூறி அவரது மருத்துவச் செலவை ஏற்றுள்ளார்.
தமிழக விவசாயிகளுக்காக ‘நமது நெல்லை காப்போம்’ என்ற அமைப்பின் மூலம் பல்வேறு சேவைகளைச் செய்து வந்தவர் ஜெயராமன். நெல் தொடர்பான சேவைகள் என்பதால் ‘நெல்’ ஜெயராமன் என்றே அனைவராலும் கொண்டாடப்பட்டவர். யாரும் எதிர்பாராத வகையில் அவரைப் புற்றுநோய் தாக்கியது.
அவர் விரைவில் பூரண குணமடைந்து வேண்டும் என்று பல்வேறு நடிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், காவல் துறையினர் என நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.
பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாப்பதில் ‘நெல்’ ஜெயராமன் ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு ரூ.5 லட்சம் நிதியை உடனடியாக வழங்க வேளாண்துறைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பல தரப்பிலிருந்து பண உதவிகளும், பிரார்த்தனைகளும் குவிந்து வரும் வேளையில், அவரை முதலில் மருத்துவமனையில் சேர்க்கவே பெரும்பாடு பட்டிருக்கிறார்கள். புற்றுநோய் சிகிச்சை என்பதால் லட்சங்களின் முன்பணமாகக் கட்டினால் மட்டுமே அவரைச் சேர்த்துக் கொள்ள முடியும் என்று நிலைமை வரும் போது தவித்துப் போய்விட்டார்கள் குடும்பத்தினர். எப்படி மருத்துவமனையில் அனுமதித்தார்கள், என்ன நடந்தது என்று விசாரித்த போது கிடைத்த தகவல்கள் அனைத்துமே ஆச்சர்யமானவை.
முழுச் செலவையும் ஏற்ற சிவகார்த்திகேயன்
சமூக வலைதளத்தில் ‘நெல்’ ஜெயராமனுக்கு புற்றுநோய் பாதிப்பு, மருத்துவமனையில் சேர்க்க பணமில்லாமல் தவிக்கிறார்கள் என்ற தகவல் பரவியிருக்கிறது. அப்போது சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து பேசியிருக்கிறார்கள். இடையே சிவகார்த்திகேயனும் “என்ன தேவை” என்று கேட்டிருக்கிறார். அப்போது மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென்றால், முன்பணம் கட்ட வேண்டும். அதற்கு சில லட்சங்கள் வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
உடனே சிவகார்த்திகேயன் “என் அலுவலகத்திலிருந்து உங்களிடம் பேசுவார்கள். அதுமட்டுமன்றி, மருத்துவமனையில் எனக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள், பேசிவிடுகிறேன். இனிமேல் பணம் என்று உங்களிடம் கேட்கவே மாட்டார்கள். கவலைப்படவேண்டாம். முழுச்செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துவிட்டு போனை வைத்துவிட்டார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக ‘நெல்’ ஜெயராமன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. எவ்வளவு செலவாகிறது உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையுமே மருத்துவமனை நிர்வாகம் ‘நெல்’ ஜெயராமனின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கவே இல்லை.
மருத்துவர்கள் வந்து பரிசோதித்துவிட்டு சென்றதற்கான பில் மட்டும் குடும்பத்தினரிடம் வந்தது. அதையும் கட்டப் பணமின்றி மீண்டும் தவித்தனர். ஏற்கெனவே, மருத்துவமனை செலவுகளை சிவகார்த்திகேயன் கவனித்து வருவதால், இதையும் அவரிடமே கேட்டால் நன்றாக இருக்காது என்று தயங்கினர். அப்போது சத்யராஜ், கார்த்தி, சூரி போன்றவர்கள் நீண்ட உதவிக்கரத்தால், அந்த மருத்துவச்செலவை கொஞ்சம் கட்டியுள்ளனர்.
சிகிச்சை விவரம் குறித்து தெரிந்து கொள்ள இடையே சிவகார்த்திகேயன் பேசினார். அப்போது இந்த மருத்துவர்கள் செலவு விஷயம் தெரிய வந்திருக்கிறது. ''யார் உங்களிடம் கொடுத்தது. இனிமேல் பில் என்ற விஷயமே உங்கள் அறைக்கு வராது'' என்று கூறிவிட்டு மருத்துவமனையில் பேசிக் கடிந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து எந்தவொரு பில்லுமே ‘நெல்’ ஜெயராமன் அறைக்கு வரவே இல்லை.
நான் உங்க புள்ள மாதிரி
சத்யராஜ், கார்த்தி, சூரி என அனைவருமே நேரில் வந்து ‘நெல்’ ஜெயராமனைப் பார்த்து நலம் விசாரித்தார்கள். ஆனால், இவ்வளவு உதவிகள் செய்தாலும் சிவகார்த்திகேயன் நேரில் வரவே இல்லை. “இவ்வளவு உதவிகள் செய்யும் அவரைப் பார்க்கணும்பா. நன்றி சொல்லணும்” என்று கண் கலங்கியிருக்கிறார் ‘நெல்’ ஜெயராமன். உடனடியாக சிவகார்த்திகேயனுக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள். ''நேரில் வந்து பார்த்தால், உதவி செய்துவிட்டு வந்திருக்கிறார் என்று சொல்வார்களே என்று தான் வரவில்லை. நாளை காலை கண்டிப்பாக வருகிறேன்'' என்று சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.
'நெல்' ஜெயராமனுக்கு வந்திருப்பது தோல் சம்பந்தப்பட்ட புற்றுநோய் என்பதால் மிகவும் கஷ்டப்படுகிறார். அவரைப் பார்க்க வந்தவர்கள் அனைவருமே, அவரைத் தொட்டுப் பேசத் தயங்கியிருக்கிறார்கள். ஆனால் மருத்துவமனைக்கு வந்த சிவகார்த்திகேயனோ, ‘நெல்’ ஜெயராமனின் காலைத் தொட்டு வணங்கியிருக்கிறார். மேலும், அவரது கைகளை எடுத்து தன் மனது அருகில் வைத்துக் கொண்டு “நல்லாயிருப்பீங்க. நான் உங்க புள்ள மாதிரி. எதுக்கும் கவலைப்படாதீங்க. ஒரு பிரச்சினையும் இருக்காது. இவ்வளவு நெல் ரகங்களைக் காப்பாற்றியிருக்கும் நீங்கள், ஏதாவது ஒரு நெல் ரகத்துக்கு காப்புரிமை வாங்கியிருந்தீர்கள் என்றால் நீங்க கோடீஸ்வரன். அனைத்துமே எனக்கு தெரியும். உங்களைப் பற்றி நிறையப் படிச்சிருக்கேன்” என்று நீண்ட நேரம் பேசியிருக்கிறார்கள்.
மருத்துவமனையிலிருந்து கிளம்பும் போது குடும்பச் சூழலைப் பற்றி விசாரித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். 'நெல்' ஜெயராமனின் மகன் இப்போது 6-ம் வகுப்பு படித்து வருகிறான். அவனது முழு படிப்புச் செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். என்ன வேண்டுமானாலும் படிக்கட்டும், எதற்கு கவலைப்பட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். மேலும், ''மகனின் படிப்பு செலவை நான் ஏற்றியிருக்கிறேன் என்று 'நெல்' ஜெயராமனிடம் சொல்லிடுங்க. ஏனென்றால், இப்போது அவரது மனது, நமக்கு அப்புறம் மகனின் நிலைமை நினைத்து எப்படியும் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார். இதைச் சொன்னால் அந்த கவலையும் அவருக்கு இருக்காது. அவர் மறுபடியும் பழைய நிலைக்கு வரணும். பார்த்துக்கோங்க'' என்று சிவகார்த்திகேயன் அவரோடு இருந்தவர்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த விஷயத்தை ‘நெல்’ ஜெயராமனிடமும், அவரது மனைவியிடமும் தெரிவித்தவுடன் கண்கலங்கி நன்றி தெரிவித்துள்ளனர்.
37 ஆயிரம் விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்திய 'நெல்' ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டைச் சேர்ந்த ஜெயராமன், ‘நமது நெல்லை காப்போம்’ என்ற இயக்கம் மூலம் பாரம்பரிய விவசாயத்தை போற்றிப் பாதுகாத்து வந்தார். இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்து, அனைத்து விவசாயிகளும் பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் சேவை செய்து வந்தார்.
மாப்பிள்ளை சம்பா, ராஜமன்னார், கவுனி, மிளகுசம்பா, குண்டு கார், சேலம் சம்பா, சிகப்பு குருவிகார், கல்லிமடையான், சம்பா மோசானம், வாடன் சம்பா, பிச்சாவாரி, நவரா, நீலன் சம்பா போன்ற 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து, விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி உள்ளார். தனது அனுபவங்களை மற்ற விவசாயிகளுடன் பரிமாறிக் கொள்ளும் வகையில் ஆண்டு தோறும் மே மாதத்தில் ‘பாரம்பரிய நெல் திருவிழா’ நடத்தி வந்தார். அதில், ஒவ்வொரு விவசாயிக்கும் 2 கிலோ பாரம்பரிய விதைகளை இலவசமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஜெயராமன் 37 ஆயிரம் விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தி, தமிழகத்தில் பாரம்பரிய நெல் உற்பத்தியினை உயர்த்திய பெருமைக்குரியவர். மேலும், இவர் ‘மாமருந்தாகும் பாரம்பரிய நெல்’, ‘நெல்லதிகாரம்’, ‘நெல்லுக் கிறைத்த நீர்’ போன்ற நெல் தொடர்பான நூல்களை எழுதி, விவசாயிகளிடையே பாரம்பரிய நெல் ரகங்களை பிரபலப்படுத்தியும் அதன் உற்பத்தியை ஊக்கப்படுத்தியும் உள்ளார்.