

தமிழகத்தில் பால் உற்பத்தியைப் பெருக்க ரூ.46.50 கோடியில் புதிய உபகரணங்கள் நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை கூறியதாவது:
வெண்மை புரட்சிக்கு வித்திட்டு பால் உற்பத்தியை பெருக்குவதற்கு, தொடர் நடவடிக்கைகளை எனது அரசு எடுத்ததன் பயனாக, அதிக பால் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் ஒன்றாக விளங்குகிறது. திமுக ஆட்சியில் நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் என்று இருந்த ஆவின் பால் கொள்முதல், 2013-14-ல் 23.22 லட்சம் லிட்டர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பால் பண்ணைகளின் கட்டமைப்பை அதிகரித்து பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் நலனுக்காகவும், கால்நடை தீவன பயன்பாட்டை ஊக்கப்படுத்தவும் கீழ்க்காணும் பணிகள் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு இணையத்தின் மூலம் 46.50 கோடியில் மேற்கொள்ளப்படும்.
உட்கட்டமைப்பு வசதிகள்
சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், விழுப்புரம் மற்றும் வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களின் பால் பண்ணை மற்றும் பால் குளிரூட்டும் நிலையங்களின் இயந்திர தளவாடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய பால் குளிரூட்டும் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் ரூ.35.77 கோடியில் நிறுவப்படும். இதன் மூலம் சுமார் 2.264 லட்சம் பால் உற்பத்தியாளர்களும், 5 லட்சத்து 13 ஆயிரத்து 138 பால் நுகர்வோரும் பயனடைவர்
தமிழக பால் உற்பத்தியாளர்கள் இடையே கால்நடை தீவனப் பயன்பாட்டை ஊக்கப்படுத்த, ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் தீவன தொழிற்சாலை ரூ.10.73 கோடி செலவில் விரிவாக்கப்படும். இதன் மூலம் தீவன உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 150 டன் என்ற அளவுக்கு உயர்த்தப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 4.29 லட்சம் உறுப்பினர்கள் பயனடைவர். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.