Published : 16 Nov 2018 08:24 AM
Last Updated : 16 Nov 2018 08:24 AM

ஈசிஆர் சாலையில் பேருந்து - கார் மோதல்: சென்னை கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு

மாமல்லபுரம் அருகே ஈசிஆர் சாலையில் நேற்று அதிகாலையில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சென்னை யைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 12:30 மணியவில் ஈசிஆர் சாலையில் சென்றபோது, புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த கார், முன்னாள் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில் பேருந்தின் அடியில் கார் சிக்கி நசுங்கியது. காரில் பயணித்த சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் கார்த்திக்(21), பெரம்பூரைச் சேர்ந்த நேதாஜி(21), திலீப்குமார்(22) மற்றும் ரவிச்சந்திரன் என்பவரின் மகன் சதீஷ்(22), தஞ்சாவூரைச் சேர்ந்த முகம்மது தமீம் ஆகிய இளைஞர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் 5 பேரும் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படித்து வந்த னர்.

மேலும், பேருந்தில் பயணித்த 16 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேருந்தின் அடியில் கார் சிக்கி நசுங்கியதால், இறந்தவர்களின் உடல்களை வெளியே எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, திருக்கழுக்குன்றம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் சுமார் 3 மணி நேரம் போராடி கிரேன் உதவியுடன் உடல்களை மீட்டனர். இதனால், ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து தொடர்பாக, மாமல்லபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x