

டெல்லி அரசு தொடர்பாக ஹெச்.ராஜா வெளியிட்ட ட்வீட்டை நீக்கிவிட்டதால், அட்மின் வேலையா என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.
பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பட்டாசு கெடுபிடி வழக்கில் ஒருவர் கைது செய்யப்படதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். பின்னர், அதை சில நிமிடங்களிலேயே நீக்கினார். இதனால் மீண்டும் சமூக வலைதளத்தில் கிண்டலுக்கு ஆளானார்.
டெல்லியில் அனுமதிகப்பட்ட நேரத்துக்கு மாறாக மகன் பட்டாசு வெடித்ததால், தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இச்செய்தியை குறிப்பிட்டு ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “பிராமி விஜயன் பாதையில் கெஜ்ரிவால்” என்று தெரிவித்தார்.
இந்த ட்வீட்டிற்கு முதலில் கேரள முதல்வரின் பெயர் பினராயி விஜயன் என்று நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கினர். மேலும், டெல்லி தலைநகராக இருந்தாலும் யூனியன் பிரதேசம் என்பதால் அதன் காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. டெல்லி காவல்துறையை ராஜா குறை கூறியிருப்பது மத்திய அரசை விமர்சிப்பதற்குச் சமம் என்றும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே அந்த ட்வீட்டை நீக்கினார் ஹெச்.ராஜா. ஆனால், அப்போதும் நெட்டிசன்கள் அவரை விட்டுவைக்கவில்லை, அட்மினுக்கு சிக்கல் வருமோ என ட்வீட்டை நீக்கிவிட்டீர்களா என்று கிண்டலடிக்கத் தொடங்கிவிட்டனர்.
முன்பாக, பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக ஹெச்.ராஜா தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அது சர்ச்சையானவுடன் நீக்கிவிட்டு “நான் பதிவு செய்யவில்லை. என் அட்மின் செய்துவிட்டார்” என்று பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.