

புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த மத்திய குழு தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியது.
புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஏற்பட்ட புயல் சேதங்கள் குறித்த அறிக்கையை அளித்தார்.
அப்போது அவர் தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிட்டு சீரமைப்புப் பணிக்காக மத்திய அரசு ரூ.16,341 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், சீரமைப்புப் பணிக்காக முதல்கட்டமாக ரூ. 1500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
சேதப்பகுதிகளை பார்வையிட மத்திய குழுவை உடனடியாக அனுப்பி வைக்கும்படி கோரினார். அதன்படி சேதப் பகுதிகளைப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க மத்திய குழு கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் வந்தது.
உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் மத்திய குழு கடந்த மூன்று நாட்களாக கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். புதுக்கோட்டை, தஞ்சை என ஆய்வு செய்த அவர்கள் நாகை மாவட்டம் விழுந்தமாவடி, வேதாரண்யம், புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
புயல் பாதித்த காரைக்காலுக்குச் சென்ற மத்திய குழு, பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். சேதங்களை மதிப்பீடு செய்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தும் குறைகளைக் கேட்டறிந்தனர். பின்னர், ஆய்வுப் பணியை முடித்த பின் அக்குழுவினர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.
புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களின் பல பகுதிகளை நாங்கள் பார்வையிட்டோம். நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தோம்.
புயலால் பயிர்கள், தென்னை, வாழை, மா உள்ளிட்ட மரங்கள் அழிந்துள்ளன. ஏரளமான வீடுகளும் பலத்த சேதம் அடைந்துள்ளன. புயல் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ள மத்திய குழு புதுவையிலிருந்து இன்று சென்னை வந்தது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது முதல்வருடன் துணை முதல்வர் ஓபிஎஸ், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாகத் துறை ஆணையர் சத்யகோபால் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
முதல்வருடனான ஆலோசனைக்குப் பின் டெல்லி செல்லும் மத்திய குழு ஒருவார காலத்திற்குள் தங்களது ஆய்வறிக்கையை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.