புயலின்போது விழுந்தமரங்களை மீண்டும் வளர்த்தெடுக்க என்ன செய்ய வேண்டும்: தன்னார்வ அமைப்பு அறிவுரை
புயலால் சாய்ந்து விழுந்த மரங்களிலிருந்து போத்துகளைக் கழித்து மீண்டும் நடும் பணியை ‘வனம்' என்ற தன்னார்வ அமைப்பு செய்து வருகிறது.
திருவாரூர் பகுதியில் இந்தப் பணியை மேற்கொண்டு வரும் அந்த அமைப்பைச் சேர்ந்த கலை மணி, ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:
‘கஜா’ புயல் தாக்கியதில் தஞ்சா வூர், திருவாரூர், நாகை, புதுக் கோட்டை மாவட்டங்களில் லட்சக் கணக்கான மரங்கள் சாய்ந்து விட்டன. எனவே, எதிர்காலத்தில் மிகவும் குறைவான மரங்களே உள்ள பகுதிகளாக இந்த மாவட் டங்கள் திகழ வாய்ப்பு உள்ளது. இதனால் பருவ மழை குறையவும், இப்பகுதியில் பூமி வெப்பம் அடையவும் வாய்ப்புள்ளது.
எனவே, புயல் தாக்கி மரங்கள் சாய்ந்து விழுந்ததால் மக்களின் இயல்பு நிலை முற்றிலும் பாதிக் கப்பட்டுள்ளது. அதனால், மரங் களின் மீதே பலருக்கும் வெறுப் புணர்வு ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து எதிர்காலத்தில் இயற்கை யிடமிருந்து பெறவேண்டிய பருவமழையை உரிய நேரத்தில் பெறுவதற்கான முயற்சிகளை தற்போது தொடங்க வேண்டும். அதற்கு சாய்ந்து விழுந்த மரங்களி லிருந்து 7 அல்லது 8 அடி உயரம் கொண்ட கிளைகளை போத்துகளா கக் கழித்து நட வேண்டும்.
செடிகளாக வைத்து மரமாக வளர்க்க குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் ஆகிவிடும். ஆனால், போத்துகளாக நடும்போது, 2 ஆண்டுகளில் அது மரமாகி விடும். தற்போது அனைத்து மரங்களும் சாய்ந்து விழுந்து விட்டதால் அந்த மரங்களின் போத்துகளை இதற்கு பயன்படுத்தலாம்.
தற்போது மழை பெய்து வருவதால் இந்த மழையிலேயே மரங்கள் துளிர்விட தொடங்கிவிடும். பராமரிப்பும் மிகக் குறைவு. போத்து களை நடும்போது கடப்பாறையை பயன்படுத்தி குழி தோண்டி அதில் போத்தை செருகி மிக இறுக்கமாகப் புதைக்க வேண்டும்.
வேர்ப் பிடிப்பு அதிகம் உள்ள நாட்டு மரங்களை நடுவதன் மூலம் எளிதில் சாய்ந்து விடாமல் பாதுகாக்க முடியும். ஆலம், ஒதியம், கல்யாண முருங்கை, வாதநாராயணன், இலுப்பம், நாவல், வேம்பு போன்ற மரங்களை அதிகளவு நடலாம் என்றார்.
