

தமிழகத்தில் பொன்மாணிக்கவேலைத் தவிர திறமையான அதிகாரிகள் இல்லை என்பது அரசின் எண்ணமாக இருப்பதால்தான் சிபிஐ விசாரணைக்கு கேட்டனர், என வழக்கை தொடுத்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தெரிவித்தார்.
சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி அரசாணை வெளியிட்ட அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்புகளை வழங்கியது. அரசின் அரசாணைக்கு தடைவிதித்த உயர் நீதிமன்றம், ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பும் கொடுத்துள்ளது.
தீர்ப்புக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கூறியதாவது:
பொன் மாணிக்கவேலைத் தவிர மற்ற அதிகாரிகள் மீது சாயத்தைப்பூசும் வேலையைச் செய்துள்ளீர்களே?
நான் சாயத்தைப்பூசவில்லை, எங்களிடம் வழக்கை விசாரிக்க ஆட்களே இல்லை எனவே சிபிஐக்கு மாற்றுகிறோம் என அரசுத்தரப்பே உயர் நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்துள்ளார்கள். அவர்களே இன்ன அதிகாரி இருக்கிறார் என்று கூறியிருக்கலாமே.
உள்நாட்டு வெளிநாட்டு தொடர்புகள் உள்ளதால்தான் சிபிஐக்கு மாற்றியுள்ளோம் என்று கூறியுள்ளார்கள், நீங்கள் இவ்வாறு சொல்கிறீர்களே?
இல்லை. தவறு. இன்ன அதிகாரி இருக்கிறார் அவரை வைத்து விசாரணை நடத்துகிறோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் இப்போது அப்படி சொல்லாததால் இப்படி தீர்ப்பு வந்துள்ளது.
பொன் மாணிக்கவேல் கூடுதல் டிஜிபிக்கு ரிப்போர்ட் கொடுக்கவேண்டுமா? யாருக்கு கொடுக்கவேண்டும்?
தேவையில்லை, அவர் விசாரணையின் முழு அறிக்கையையும் ஒரு சீலிட்ட கவரில் உயர் நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்யவேண்டும் என்று தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே பொன் மாணிக்கவேல் நியாயமான முறையில் அவர் பணியை செய்ய எவ்வித தடையுமில்லை.
தீர்ப்பை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றம் சென்றால் கேவியட் தாக்கல் செய்வீர்களா?
நிச்சயம் தாக்கல் செய்வேன். நாளையே டெல்லி கிளம்புகிறேன். கேவியட் போடப்போகிறேன். இதை விட்டுவிடுவேனா நான். இதன் பின்னணியில் பெரிய சதி இருக்கு. கூடுதல் ஆணையர் கவிதா கைதில் அவரைக்காப்பாற்ற ஒரு கூடுதல் டிஜிபி அவரது ஜாமீன் மனுவில் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்கிறார். அந்த போன் ரெக்கார்ட் என்னிடம் உள்ளது.
இவர்களுக்கு எப்படியாவது ஐஜி பொன் மாணிக்கவேலை ஒழிக்கவேண்டும், சிலைகடத்தல் திருடர்களை பாதுகாக்கவேண்டும் என்பதே அவர்கள் எண்ணம்.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.