

போக்குவரத்துக் கழக பணியாளர் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்க நிர்வாகக் குழு தேர்தலில் தொமுச, சிஐடியு கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இது தொடர்பாக தொமுச பொதுச்செயலாளர் மு.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
போக்குவரத்துக் கழக பணியாளர் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் நிர்வாகக் குழு தேர்தல், கடந்த 26-ம் தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் 52 மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது. கூட்டுறவு சங்கத்தின் மொத்த உறுப்பினர்கள் 12,017. பதிவான வாக்குகள் 9,255. பதிவான வாக்குகள் சென்னையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி அண்ணா திருமண மண்டபத்தில் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்து தொமுச பேரவை மற்றும் சிஐடியு கூட்டணி வேட்பாளர்கள் 80 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வந்தனர். இறுதியாக நள்ளிரவு 3 மணி அள வில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டன. இதில் தொமுச - சிஐடியு கூட்டணி வேட்பாளர்கள் அதிகபட்சமாக 7,401 வாக்குகளும், அண்ணா தொழிற்சங்க வேட்பாளர்கள் அதிகபட்சமாக 1,400 வாக்குகளும் பெற்றிருந்தனர். தொமுச - சிஐடியு கூட்டணி வேட்பாளர்கள் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். 13 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் இதே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் சண்முகம் கூறியுள்ளார்.