Published : 08 Aug 2014 12:00 AM
Last Updated : 08 Aug 2014 12:00 AM

பயணிகள் ரயில்களில் பசுமை கழிப்பறை வசதி: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மனிதக் கழிவுகள் தண்டவாளப் பகுதியில் விழுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, சுகாதாரச் சீர்கேடு ஆகியவற்றைத் தவிர்க்க அனைத்து பயணிகள் ரயில்களிலும் பசுமை கழிப்பறை அமைப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு ரயில்வே துறை செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த டி.தர்பார் ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:

நாடு முழுவதும் தினமும் 40 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 20 கோடி மக்கள் ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களுக்கு மிக அருகில் வசிக்கின்றனர். ரயில்களில் உள்ள கழிப்பறைகளை தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்துகின்றனர். இதனால் தினமும் 400 டன் என்ற வகையில் ஆண்டுக்கு 1.46 லட்சம் டன் மனிதக் கழிவுகள் இந்தியா முழுவதும் ரயில் தண்டவாளப் பகுதிகளில் தேங்குகின்றன.

இந்தக் கழிவுகளில் இருந்து 6 மில்லியன் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் காற்றில் பரவுகின்றன. இதனால் ரயில் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தண்ட

வாளங்களுக்கு மிக அருகில் வசிப்பவர்கள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். தவிர, தண்டவாளப் பகுதியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் வசிப்பவர் களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர்.

இந்த மனிதக் கழிவுகள் நீருடன் கலப்பதால் அந்தத் தண்ணீரை பருகும் மக்களுக்கு ஏராளமான நோய்கள் வருகின்றன. வெயில் காலத்தில் இந்தக் கழிவுகள் பவுடராக மாறி காற்றில் பரவுவதால், அந்தக் காற்றை சுவாசிப்பவர்களுக்கு கழிவுகளில் கலந்துள்ள வைரஸ்,

பாக்டீரியாக்கள் தாக்கி நோய்கள் பரவுகின்றன. தவிர ரயிலுக்குள் பயணம் செய்வோர், குடிநீர் அருந்துவோர் என அனைவரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். கால்நடைகளும் பாதிக்கப் படுகின்றன.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் ரயில்களில் பசுமை கழிப்பறை அமைக்கப்பட்டு மனிதக் கழிவுகள் தண்டவாளப் பகுதியில் கொட்டுவது தவிர்க்கப் படுகிறது. கழிவுகள் ஒரே இடத்தில் சேகரிக்கப்பட்டு சுத்திகரிக் கப்படுகிறது. இதனால் அங்க நோய்த் தொற்று தவிர்க்கப்படுகிறது.

லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, 2008-09 ஆம் ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் பயணிகள் ரயிலில் பசுமை கழிப்பறை அமைப்பதற்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அந்தத் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. எனவே, சுற்றுச்சூழல் பாதிப்பைத் தவிர்க்கவும், சுகாதார மேம்பாட்டுக்காகவும் இந்தியாவில் அனைத்து பயணிகள் ரயில்களிலும் பசுமை கழிப்பறை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் பி.எஸ்.மெல்டியூ வாதிடும்போது, பசுமை கழிப்பறையில் சேரும் மனிதக் கழிவுகளை மீத்தேனாக மாற்றி மின்சாரம் தயாரிக்கலாம். ஜப்பானில் ரயில்களில் சேரும் மனிதக் கழிவுகள் பாக்டீரியா கலந்து அழிக்கப்படுகின்றன. அனைத்து ரயில்களிலும் ஒரு ஆண்டில் பசுமை கழிப்பறை அமைத்து விடலாம். இதனால் சுகாதாரத்தை மேம்படுத்தலாம் என்றார்.

இதையடுத்து, இந்தியாவில் அனைத்து பயணிகள் ரயில்களிலும் பசுமை கழிப்பறை அமைப்பது குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ரயில்வே துறை செயலர், தலைவர், தெற்கு ரயில்வே பொது மேலாளர், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x