Published : 10 Nov 2018 05:28 PM
Last Updated : 10 Nov 2018 05:28 PM

‘சர்கார்’ அரசியல் பேசக்கூடாதா? எது இலவசம்? அது தூக்கி எறியப்படவேண்டிய ஒன்றா? - முத்தரசன் சிறப்புப் பேட்டி

'சர்கார்' படத்தில் இலவசங்களைத் தூக்கி எறி என்று மக்களைத் தூண்டிவிடவில்லை. இலவசங்களைத் தூக்கி எறியுங்கள் என்று சொல்வது, இலவசங்களை அரசியலாகப் பயன்படுத்தும் காரணத்தினால் சொல்லவேண்டிய அவசியம் வருகிறது. அப்படித்தான் அதைப் பார்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

தீபாவளி அன்று திரைக்கு வந்த விஜய்யின் 'சர்கார்' படம் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. அரசின் திட்டங்களை விமர்சித்த காட்சிகள், ஜெயலலிதாவின் இயற்பெயர் எனக் கூறப்படும் கோமளவல்லி என்ற பெயரை வில்லி பாத்திரத்திற்கு சூட்டியது என்று ஆளுங்கட்சித் தரப்பில் ஆட்சேபம் எழுந்தது. இதனால் படம் மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு காட்சிகள் நீக்கப்பட்டன.

மறுபுறம் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அரசு கொடுத்த இலவசப் பொருட்களைத் தீயிட்டு கொளுத்தியும், உடைத்துப்போட்டும் காணொலி வெளியிடுகின்றனர். இவை அனைத்தும் சரியா?

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் சாதாரண மக்களுக்கு கிடைக்கும் அடிப்படைச் சேவைகளை இலவசங்கள் என புறந்தள்ள ஒரு பெரும் சதி நடக்கும் நேரத்தில் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரத்துக்கான சேவைகளை இலவசம் என வெறுக்கும் ஒரு இளைய சமுதாயத்தை திரைப்படங்கள் வளர்த்து விடுகிறதா? என்கிற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

இதுபோன்ற கேள்விகளை 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனிடம் முன் வைத்தபோது அவர் அளித்த பதில்கள்:

நலத்திட்டங்கள் தேவை இல்லை, இலவசங்கள் தேவை இல்லை என எதிர் கருத்து உருவாக்கப்படுகிறது, இலவசங்கள் என்பதன் வரையறை என்ன?

நலத்திட்டங்கள் என்றுதான் அதைக் குறிப்பிட வேண்டும். அது தவிர்க்கமுடியாத ஒன்று. அதை இலவசம் என்று குறிப்பிடக்கூடாது. சாதாரண மக்களுக்கு எளிய மக்களுக்குப் பயனளிக்கிறதா என்றால் நிச்சயம் அது பயனளிக்கிறது. பிரச்சினை என்னவென்றால் அதை அரசியல் ஆக்கக்கூடாது. அது அரசு சார்ந்து கொடுக்கப்படுகிறதே தவிர தனிப்பட்ட அரசியல் கட்சியின் நிதியோ, தனிப்பட்ட நபரின் பணமோ அல்ல.

திமுக ஆட்சிக் காலத்தில் தொலைக்காட்சிப்பெட்டி வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இன்னும் சில பொருட்கள் கொடுக்கப்பட்டன. இவை அனைத்தும் அரசாங்கத்தின் மூலமாக இதையெல்லாம் பெற முடியாத நிலையில் உள்ள மக்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

அதை அரசியலாக்கும்போது அது விமர்சிக்கப்படுகிறது, கிண்டலடிக்கப்படுகிறது. மதிய உணவுத் திட்டம் என்பது முதன்முதலில் வெள்ளைக்காரன் ஆட்சியில் சென்னை மாநகரத்தில் சிங்காரவேலர் கொண்டு வந்த திட்டம்.

பின்னர் அதை தமிழகம் முழுவதும் மக்கள் ஒத்துழைப்புடன் மதிய உணவுத் திட்டமாக காமராஜர் கொண்டுவந்தார், பின்னர் அதை சத்துணவு திட்டமாக எம்ஜிஆர் மாற்றினார், கருணாநிதி அத்துடன் முட்டை சேர்த்து வழங்கும் திட்டமாக மாற்றினார். இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்றால் இந்த உணவுக்கும் வழியில்லாத மக்களுக்கும், அவர்கள் குழந்தைகளுக்கும் அது பயன்படுகிறது என்பதே.

அதேபோன்று நலத்திட்ட உதவிகளும் தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர் வாங்க முடியாத பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களுக்கு அது பயன்படுகிறது. ஆனால் அதை எங்கள் கட்சிதான் கொடுத்தது என்று சொல்லும்போது அது அரசியலாக்கப்படுகிறது. அதில் பல பிரச்சினைகள் உருவாகின்றன.

ஆகவே நலத்திட்டங்கள் தேவை இல்லை என்று கூற முடியாது. அவை தேவை. ஆக்கப்பூர்வமான முறையில் அவை வழங்கப்படவேண்டும்.

தற்போது, அடிப்படைத் தேவையான நலத்திட்டங்களுக்கு எதிரான மன நிலையில் இளைஞர்களைத் தயார் செய்யும் படங்கள் எடுக்கப்படுகிறதே?

நலத்திட்ட உதவிகளை அரசியல்படுத்தும்போது, என் கட்சிதான் கொடுத்தது என்று பிரச்சாரம் செய்யும்போது அதற்கு எதிரான மனநிலை, விமர்சனங்கள் வருவதை தவிர்க்க முடியாது. சாதாரண மக்களுக்கு அரசு கொடுக்கும் உதவியாக இது பார்க்கப்பட வேண்டும்.

இதை, ஒரு அரசியல் கட்சி கொடுத்ததற்கான தோற்றத்தை அளிக்கும்போது அதற்கு எதிரான விமர்சனங்கள் உருவாகின்றன. அப்படிப்பட்ட வாய்ப்பை இவர்கள்தான் உருவாக்குகிறார்கள்.

சாதாரண அடித்தட்டு நிலையில் உள்ள கிராமத்து இளைஞர்கள் தங்கள் கதாநாயகன் சொன்னார் என்று டிவி, லேப்டாப்பை தூக்கிப்போட்டு உடைக்கிறார்களே?

அது ஒரு பெரிய இயக்கம் அல்ல, ஒரு சிலர் அப்படிச் செய்யலாம். பெரிய அளவுக்கு நடக்கவில்லை. அது ஒட்டுமொத்த மக்களின் கருத்து அல்ல. அனைவரின் விருப்பமும் அல்ல.

இட ஒதுக்கீடு தேவை இல்லை என குறிப்பிட்ட சிலபேர் சொல்கிறார்கள், அதனால் அதை ஒட்டுமொத்த சமுதாயத்தின் கருத்து என்று எடுக்க முடியுமா? அதுபோன்றுதான் இதுவும்.

அடுத்து வாக்களிக்கும் நிலையில் உள்ள இளைய சமுதாயத்தை, திரைத்துறையினர் இதுபோன்ற சிந்தனைக்குத் தயார்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

சினிமாவை சினிமாவாகத்தான் பார்க்கவேண்டும், அதற்குமேல் அதை பெரிதுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. தேவையில்லாமல் திரைப்படங்களில் வரும் சில கருத்துகளை எடுத்துக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் படத்தை ஓடவைக்கும் ஏற்பாட்டைத்தான் செய்கிறார்கள். சும்மா இருந்தால் அது ஒரு பெரிய பிரச்சினையே அல்ல.

சினிமாவில் அரசியல் பேசுவது புதிதா?

சினிமா இன்று மட்டும் புதிதாக அரசியல் பேசவில்லை. சினிமா தோன்றிய காலத்திலிருந்து அரசியல் இருந்துகொண்டுத்தான் இருக்கிறது, வெள்ளைக்காரன் காலத்தில் வெள்ளையனை இந்த நாட்டைவிட்டு துரத்த வேண்டும் என்பதற்கான போராட்டம் நடந்தபோது அந்த சட்டத்துக்குட்பட்டு கருத்துகளை எப்படி சொல்லவேண்டுமோ அப்படி அன்றைய சினிமாக்கள் மூலம் சொல்லப்பட்டன. அதைத் தேவையில்லை என்று சொல்ல முடியுமா?

காலங்காலமாக சினிமாவில், நாடகத்தில், கதையில், கவிதையில் அரசியல் இல்லாமல் எதுவும் கிடையாது. அவற்றில் அரசியல் இருந்ததா? என்றால் இருக்கத்தான் செய்யும். அதில் ஆட்சேபகரமான கருத்து இருந்தால் முறைப்படி எப்படி ஆட்சேபிக்கலாம் கருத்துகளை சொல்லலாம் என்பது நடைமுறை.

எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில், 'தண்ணீர் தண்ணீர்' என்று ஒரு படம் வந்தது. அதில் முழுக்க முழுக்க அரசியல் இருந்தது. ஒரு குறிப்பிட்ட தொகுதியைச் சுட்டிக்காட்டித்தான் அந்தப்படமே வந்தது. அப்போது எம்ஜிஆர் எதிர்க்கவில்லை, தியேட்டரை முற்றுகையிடவில்லை, பேனரைக் கிழிக்கவில்லை. அது ஒரு கருத்து. தண்ணீர் கிடைக்கவில்லை என்பதை திரைப்படமாக கொண்டுவந்தார்கள். அந்தப் படம் முழுக்க முழுக்க அரசியல்தான். எம்ஜிஆர் அதை அனுமதித்தார்.

‘சர்கார்’ படத்துக்கு எதிரான போராட்டம் எத்தகையது?

சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை, பிரச்சினைகளை சினிமாவில் காட்ட முயற்சி செய்கிறார்கள். அதை ஒரு பெரிய விஷயமாக, போராட்டமாக நடத்தும் அவசியம் கிடையாது.

இது தேவையற்ற ஒன்று. படத்தில் வந்ததை வைத்து பெரிய பிரச்சினையாக்கி அந்தப் படத்தை பார்ப்போமா வேண்டாமா? என்கிற எண்ணத்தை மாற்றி ‘சரி என்னதான் இருக்கு போய் பார்ப்போம்’ என்கிற எண்ணத்தை உருவாக்கி படத்தை ஓடவைக்கும் வேலையைத்தான் செய்கிறார்கள்.

அவர்கள் கட்டிய பேனர் விளம்பரத்தைவிட பேனரைக் கிழித்த விளம்பரம்தான் அதிகமானது. சினிமாவில் காலங்காலமாக கொஞ்சமோ நஞ்சமோ, கூடுதலோ குறைச்சலோ அரசியல் இருக்கத்தான் செய்கிறது. போலீஸ் கடுமையாக லஞ்சம் வாங்குவது, சமூக விரோதிகளுக்கு துணையாக இருப்பதுபோன்று காட்சிப்படுத்தி எடுக்கத்தானே செய்கிறார்கள்.

இலவசம், சேவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

இலவசம் என்கிற வார்த்தையையே நாம் பயன்படுத்தத் தேவையில்லை. இதையெல்லாம் பெறமுடியாத மக்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்வதாகத்தான் அதைப் பார்க்கவேண்டும். தொலைக்காட்சிப் பெட்டியையே வாங்கமுடியாத நிலையில் உள்ளவர்கள் பார்க்க விருப்பம் இருக்கிறது, ஆனால் வாங்க வழியில்லாத மக்களும் இருக்கிறார்கள்.

ஒரு சமூகம், கோடிக்கணக்கான மக்கள், பின் தங்கிய நிலையில் அவர்கள் இருக்கும்போது அவர்களுக்கு அரசு உதவி செய்வதைத் தவறு என்று சொல்ல முடியாது. இங்கே பிரச்சினை எங்கிருந்து வருகிறது என்றால்? அதை தன் சாதனையாக, தனது கட்சியின் சாதனையாக பிரச்சாரம் செய்யும்போதுதான் பிரச்சினையாக உருவெடுக்கிறது. அதை அரசின் சாதனையாக சொல்ல வேண்டும், அரசு கொடுத்தது என்று சொல்ல வேண்டும்.

நலத்திட்டங்கள் தவிர்க்கப்படவேண்டியவையா?

இதுபோன்ற சர்ச்சைகள் வருவதை வைத்து நலத்திட்டங்களை மக்களுக்கு கொடுக்கக்கூடாது என்று சொல்லமுடியாது. நலத்திட்டங்களை தவிர்க்க முடியாது. மாணவர்களுக்கு சைக்கிள் கொடுத்தனர். சைக்கிள் வாங்கமுடியாத நிலையில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அது பயன்படுகிறது அல்லவா? அது நல்லதுதானே.

லேப்டாப் எல்லோரும் வாங்க முடியாது. அது மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது. புத்தகம் மற்ற உதவிகள் இலவசமாகக் கிடைக்கிறது. நலத்திட்ட உதவிகள் வறுமையில், வறுமைக்கோட்டின் கீழே உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு இப்படிப்பட்ட உதவிகள் தேவைப்படுகிறது.

இதையெல்லாம் தனிப்பட்ட நபர்களோ, இயக்கங்களோ செய்யமுடியாது. ஒருவருக்கு, சில பேருக்கு வேண்டுமானால் செய்யலாம். தொடர்ச்சியாக, அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடியும். அதை அரசே பொறுப்பேற்று செய்கிறது அதைத் தவறு என்று சொல்லமுடியாது.

'சர்கார்' படத்தில் இலவசங்களைத் தூக்கி எறி என்று மக்களைத் தூண்டிவிடுவதாக ஆளுங்கட்சி குற்றம் சாட்டுகிறதே?

தூண்டிவிடவில்லை, இலவசங்களைத் தூக்கி எறியுங்கள் என்று சொல்வது, இலவசங்களை அரசியலாகப் பயன்படுத்தும் காரணத்தினால் சொல்லவேண்டிய அவசியம் வருகிறது. அப்படித்தான் அதைப் பார்க்க வேண்டும். நலத்திட்ட உதவிகளை அரசியலாக்கி அதன்மூலம் அரசியல் லாபம் பெற முயற்சிக்கும்போது அதைத் தூக்கி எறியுங்கள் என்கிறார்கள், அப்படித்தான் வருவதாக நான் கருதுகிறேன்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x