Published : 10 Nov 2018 12:11 PM
Last Updated : 10 Nov 2018 12:11 PM

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: இனவெறி கொண்ட ராஜபக்சேவுக்கு அதிகாரத்தை கொடுக்கும் செயல்; தினகரன் கண்டனம்

இனவெறி கொண்ட ராஜபக்சேவுக்கு அதிகாரத்தை கொடுக்க முயற்சிப்பது, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும் என, அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட செய்தி, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பேரிடியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்ட கொடூர நாட்களின் சுவடுகள் மறைந்து அமைதியான வாழ்வை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது.

இலங்கையில் தமிழர் இன அழிப்பை முன்னெடுத்த ராஜபக்சேவை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிரதமராக அறிவித்த கொடுமையை, அந்நாட்டு நாடாளுமன்றம் முறியடித்துவிடும் என்று உலகமே எதிர்நோக்கியிருந்த நேரத்தில், இந்த ஜனநாயக விரோத செயலை புரிந்த இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இனவெறி கொண்ட ராஜபக்சேவுக்கு அதிகாரத்தை கொடுக்க முயற்சிக்கும் இச்செயல், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்திய அரசு இந்த நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், நலனுக்கும் தீங்கு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐநா சபை உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை அழிக்கும் இந்த அக்கிரமச் செயல் வீழ்த்தப்பட வேண்டும்” என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x