Published : 10 Aug 2014 02:16 PM
Last Updated : 10 Aug 2014 02:16 PM

அறிவியல் கண்காட்சியில் அசத்திய படைப்புகள்!: கால் அழுத்தம் மூலம் மின்சாரம் உற்பத்தி

திருநெல்வேலி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் அரசுப்பள்ளி மாணவர், மாணவியரின் படைப்புகள் ஆச்சரியப்படுத்தின.

அறிவியல் கண்காட்சிகளில் பெரும்பாலும் மெட்ரிக், தனியார் பள்ளி மாணவர், மாணவியரின் படைப்புகள் தான் அதிகம் ஆக்கிரமிப்பு செய்யும். அத்தகைய படைப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பாளையங்கோட்டை காது கேளாதோர் பள்ளியில் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர், மாணவி யரும் தங்கள் படைப்பு களை காட்சிக்கு வைத்து அசத்தி யிருந்தனர்.

287 படைப்புகள்

கண்காட்சியில் 287 அறிவியல் சார்ந்த படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலானவை எலக்ட்ரானிக் தொழில்நுட்பம் சார்ந்ததாகவும், சுற்றுச்சூழல் மாசுபாடு, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவை தொடர்பான படைப்புகளாக இருந்தன. டெங்கு கொசுவின் பெரிய அளவிலான மாதிரி பார்வையாளர்களை கவர்ந்தது.

எளிய முறை மின் உற்பத்தி

நாம் கால் பதிக்கும் அழுத்தத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பத்தை விளக்கும் ஆர்.ரம்யா என்ற மாணவியின் படைப்பு புதுமையாக இருந்தது. பணகுடி, ரோஸ்மியாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ரம்யா. இவரும் இவரது அறிவியல் ஆசிரியை அந்தோணி பிரேமாவும் இணைந்து உருவாக்கிய, இந்த எளிய படைப்பு மின்சாரம் தயாரிப்புக்கு புதிய உத்தியை சொன்னது.

தரையில் பாதத்தை அழுத்தும்போது உருவாகும் அழுத்தத்திலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து விளக்குகளை எரியவைக்கும் (Electricity from Footsteps) இத் தொழில்நுட்பம் குறித்து ரம்யா கூறும்போது, “மின்சாரத் தேவை அதிகரித்திருக்கிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின் உற்பத்தியை மேற்கொள்ள புதிய திட்டங்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் மனிதர்கள் நடக்கும்போது பாதங்கள் தரையில் கொடுக்கும் அழுத்தத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கும் எண்ணம் உருவானது. அது தொடர்பான மாதிரியை உருவாக்கி இருக்கி றோம்” என்றார்.

பேட்டரி கூண்டு

மானூர் அடுத்த எட்டாங்குளம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் சி.சுடலை அரிமுத்துக்குமார், பி.கோகுலசந்திரன் ஆகியோர் காட்சிக்கு வைத்திருந்த மாதிரியும் அனைவரையும் ஈர்த்தது.

‘Safety Electric Pole Climber’ என்ற இந்த மாதிரியை உருவாக்க தலைமையாசிரியை செல்வி, ஆசிரியைகள் ஜெயஜோதி, இந்துமதி ஆகியோர், இவருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். மின்கம்பங்களில் ஏறி மின் இணைப்புகளை சரிசெய்யும் தொழிலாளர்களுக்கு நேரும் ஆபத்தை தடுக்கும் வகையில், மின்கம்பங்களில் பேட்டரி மூலம் கூண்டுபோல் வடிவமைத்துள்ள அமைப்பை இயக்கி மின்பழுதுகளை சரி செய்துவிட்டு பத்திரமாக தரைக்கு வந்துசேரும் வகையில் இந்த மாதிரி வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த மாதிரியை உருவாக்கிய மாணவர்களிடம் பேசியபோது, “மின்கம்பங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலியானவது குறித்த செய்திகள் அதிகம் வருகின்றன. மின் தொழிலாளர்கள் மற்றும் தீயணைப்பு படையினருக்கு உதவும் வகையில் இந்த உபகரணம் சிறிய அளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பிலுள்ள பேட்டரிகளை சூரியமின்சாரம் மூலம் இயக்கலாம். மரங்கள் ஏறவும் இவை பயன்படும்” என்றனர்.

இதுபோல், பல வியக்கத்தகு படைப்புகளை மாணவ, மாணவியர் காட்சிக்கு வைத்திருந்தனர். சனிக்கிழமையுடன் முடிவுற்ற இக்கண்காட்சியை, விடுமுறை நாளான இன்றும் பார்வைக்கு வைத்திருந்தால், ஏராளமான பள்ளி மாணவ, மாணவியருக்கு இதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x