

சென்னையில் சக காவலரை ஓடும் வாகனத்திலிருந்து தள்ளிவிட்ட போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் இழுபறிக்குப் பின் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சென்னை தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்துக் காவலராகப் பணிபுரிபவர் தர்மராஜ் (41). சமீபத்தில் இறந்த தனது அம்மாவுக்கு திதி கொடுப்பதற்காக ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் விடுமுறை கேட்க, அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த தர்மராஜ், அத்தியாவசியத் தேவைக்குக்கூட விடுமுறை கொடுக்க மறுக்கிறார் என்று வாக்கி-டாக்கி மூலம் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். இதனால் தர்மராஜ் மீது கோபம் அடைந்த ஆய்வாளர் ரவிச்சந்திரன், சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தர்மராஜை பிடிப்பதாகக் கூறி, அவரை கீழே தள்ளிவிட்டார்.
கீழே விழுந்த தர்மராஜுக்கு தோள்பட்டை எலும்பில் முறிவும், கால் பெருவிரலில் முறிவும் ஏற்பட்டது. ஆனாலும் அவரை வலுக்கட்டாயமாக குற்றவாளியைப் பிடிப்பதுபோன்று பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் மது அருந்தியுள்ளதாக அறிக்கை பெற்று தர்மராஜைப் பணியிடை நீக்கமும் செய்ய வைத்தார் ஆய்வாளர் ரவிச்சந்திரன்.
காயம்பட்ட தர்மராஜ் தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போக்குவரத்து ஆய்வாளர் தள்ளிவிட்ட காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் ஆய்வாளர் ரவிச்சந்திரனை ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து கூடுதல் ஆணையர் உத்தரவிட்டார். ரவிச்சந்திரன் செயலுக்கு மேலும் எதிர்ப்பு வலுக்கவே, பின்னர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
தர்மராஜுக்கு வலுக்கட்டாயமாக வாயில் மது ஊற்றி, மருத்துவமனையில் சான்றிதழ் வாங்கப்பட்டிருப்பதாகவும் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரது மனைவி ஸ்ரீதேவி தனது கணவரை கீழே தள்ளிக் கொல்ல முயன்றதாக ரவிச்சந்திரன் மீது புகார் அளித்து, கொலை முயற்சி வழக்கில் அவரைக் கைது செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
புகார் அளிக்க அபிராமபுரம் காவல் நிலையத்திற்குச் சென்ற தர்மராஜின் மனைவி ஸ்ரீதேவியை பல மணி நேரம் காத்திருக்க வைத்தனர். 5 மணி நேரத்திற்குப் பின்னரே புகாரின் மீதி சிஎஸ்ஆர் கொடுக்கப்பட்டது. மேற்கண்ட விவரங்களைப் பத்திரிகை செய்தி வாயிலாக அறிந்த மாநில மனித உரிமை ஆணையம் இந்த வழக்கைத் தாமே முன்வந்து வழக்காக எடுத்தது.
இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆய்வாளர் ரவிச்சந்திரன் காவலர் தர்மராஜை ஓடும் மோட்டார் சைக்கிளிலிருந்து தள்ளிவிட்டது மனித உரிமை மீறல் இல்லையா? என்று கேள்வி எழுப்பியிருந்தது மனித உரிமை ஆணையம்.
இந்தச் சம்பவத்தில் அபிராமபுரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் புகார் அளிக்க வந்த பாதிக்கப்பட்ட தர்மராஜின் மனைவியிடம் புகாரைப் பெற்று சிஆர்பிசி 154 பிரிவின் கீழ் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?
இதுகுறித்து காவல் ஆணையரோ அல்லது அவருக்கு கீழ் உள்ள இணை ஆணையர் அந்தஸ்துக்கு குறையாத பணியில் உள்ள அதிகாரியை வைத்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஆய்வாளர் ரவிச்சந்திரனை சஸ்பெண்ட் செய்யாமல் இழுத்தடித்துவந்த உயர் அதிகாரிகள், விவகாரம் பெரிதாகவே நேற்றிரவு அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். அவர்மீது துறை ரீதியான விசாரணையும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து 5 நாட்களுக்குப் பின் ஆய்வாளர் ரவிச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.