

இளைஞரின் ஆசை வார்த்தைகளை நம்பி பிஹார் செல்ல முயன்ற 3 இளம் பெண்களை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீஸார் மீட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையம் அருகேயுள்ள நூற் பாலையில் பணியாற்றிய 3 இளம் பெண்கள் திடீரென மாயமாகினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிப்பாளையம் போலீ ஸார், 3 பேரின் புகைப்படங்களை அனைத்து ரயில் நிலைய போலீஸா ருக்கும் அனுப்பினர். இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 பெண்களும் சுற்றி வருவதை ரயில்வே போலீஸார் கண்டுபிடித்தனர். 3 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், ‘உடன் பணிபுரிந்த பிஹாரைச் சேர்ந்த ரவிதாஸ் என்பவர் பிஹாரில் நல்ல வேலை வாங்கி தருவதாகவும் தங்குவதற்கு இடம் தருவதாகவும் கூறி அழைத்துச் செல்வதாக’ கூறினர். அதைத் தொடர்ந்து ரயில் நிலையத்தில் மறைந்திருந்த ரவிதாஸையும் போலீஸார் பிடித்து விசாரித்தனர். இதில், 3 பெண்களையும் தவறான நோக்கத்தில் பிஹார் அழைத்துச் செல்ல இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ரவிதாஸை போலீஸார் கைது செய்தனர். 3 இளம் பெண்களும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.