சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 20-ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 20-ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
Updated on
1 min read

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட வடதமிழக மாவட்டங்களில் வரும் 20-ம் தேதி முதல் 3 நாட்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

'' வங்கக்கடல் பகுதியில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை வரை அடுத்த 3 நாட்களுக்குக் கனமழை இருக்கும்.

'கஜா' புயலால் மழைகிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த வடதமிழக மாவட்டங்களுக்கு இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நல்ல மழைகிடைக்கும்.

டெல்டா மண்டலங்களில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் வரும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழை எப்படி?

சென்னையைப் பொறுத்தவரை 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அவ்வப்போது இடைவெளிவிட்டு மழை இருக்கும். குறைந்தபட்சம் இரு நாட்களுக்குச் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை இருக்கும். ஒரு சில இடங்களில் மிக கனமழையும் இருக்கும்.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுவதற்கான கால சாத்தியம் இல்லை. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகவதற்கே அதிகமான வாய்ப்புள்ளது. இதனால் வடதமிழகத்தில் உறுதியாக நல்ல மிகச்சிறந்த மழையைக் கொடுக்கும். ஆனால், புயலாக உருவாகும் வந்திகளை நம்ப வேண்டாம்''.

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in