Published : 17 Nov 2018 10:05 PM
Last Updated : 17 Nov 2018 10:05 PM

திருட்டு செல்போன் வாங்கி விற்ற 3 பேர் கைது: 2500 செல்போன்கள் பறிமுதல்

சென்னையில் திருட்டு செல்போன்களை வாங்கி விற்கும் 3 பேரைக் கைது செய்த போலீஸார் 60 ஐபோன்கள் உட்பட சுமார் 2,500 செல்போன்கள் மற்றும் 20 லேப்டாப்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் எல்லையில் நடைபெற்று வந்த செல்போன் பறிப்புக் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கண்டறியவும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், உத்தரவின்பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 9-ம் தேதி அன்று பாண்டிபஜார் காவல் எல்லையில் கார்த்திக் என்பவரின் ஐபோனை அடையாளம் தெரியாத இரு நபர்கள் பறித்துச் சென்றனர். இது சம்பந்தமாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புகார்தாரர் கார்த்திக்கின் மனைவி தொலைபேசி எண்ணை ஐ கிளவுட் லாகின் செய்ததில், அவரது செல்போன் எண்ணிற்கு வந்த அலர்ட் மெசேஜில் இருந்த செல்போன் எண்ணின் முகவரியான பெரம்பூருக்குச் சென்று அப்துல் ரகுமான் (25) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

தான் பர்மா பஜாரில் கடை வைத்துள்ளதாகவும், இவர் திருட்டு செல்போன்களைக் குறிப்பாக ஐபோன்களை வாங்கி, அதன் பாகங்களை விற்பனை செய்து வந்ததாகவும் தெரிவித்தார். உடனே, பர்மா பஜாரிலுள்ள அவரது கடைக்குச் சென்று கடையிலிருந்த 60 ஐபோன்களையும் பறிமுதல் செய்தனர்.

இதே போல, தியாகராயநகர் காவல் மாவட்டத்தில் உள்ள அன்னை சத்யா பஜாரில் உள்ள ஒரு சில கடைகளில் திருட்டு செல்போன்கள் வாங்குவதாகக் கிடைத்த தகவலின் பேரில், 3 உதவி ஆணையாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அந்த செல்போன் கடைகளைச் சோதனை செய்து, முறையான ஆவணங்கள் இல்லாத சுமார் 2,000 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இவை குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய செல்போன்களா? என விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் அடையாறு காவல் மாவட்டத்தில், தரமணியில் நவம்பர் 6-ம் தேதி  அன்று கிருஷ்ணமூர்த்தி என்பவரிடமிருந்து அடையாளம் தெரியாத நபர்கள் அவர் வைத்திருந்த இருசக்கர வாகனத்தையும் செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இவ்வழக்கில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட விஜய் மற்றும் நவீன்குமார் ஆகியோரைக் கைது செய்து விசாரணை செய்தனர்.

அதில், இருவரும் திருடிய செல்போன்களை பர்மா பஜாரில் புரோக்கர் சித்திக் மூலம் விற்பனை செய்ததாகக் கொடுத்த தகவலின்படி புரோக்கர் சித்திக்கைப் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், சித்திக் கொடுத்த தகவலின்படி பாரிமுனையிலுள்ள அங்கப்ப நாயக்கன் தெருவில் அப்துல் வகாப் என்பவர் செல்போன் ரிப்பேர் செய்யும் கடை நடத்தி வருவதாகவும், அவரிடம் ரூ.200க்கு ஸ்மார்ட் போன்களின் மொபைல் லாக்கை ஓப்பன் செய்து, ஐஎம்இஐ எண்ணை மாற்றிக் கொடுத்து தருவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து இன்று அப்துல் வகாப் கடைக்கு போலீஸார் சென்றபோது இவர் தலைமறைவாகிவிட்டார். அவரது கடையில் போலீஸார் சோதனை மேற்கொண்டு குற்றச் செயல்களுக்கு பயன்படுத்திய 2 கணினிகள், ஐஎம்இஐ எண்ணை மாற்றிப் புதிய எண்ணை பதிவு செய்யும் உபகரணங்கள் மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத 96 ஸ்மார்ட் செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்மா பஜாரில் உதவி ஆணையாளர் தலைமையிலான தனிப்படையினர் கடந்த நவம்பர் 15-ம் தேதி அன்று, பர்மா பஜாரில் பழைய செல்போன்கள் விற்பனை செய்யும் கடைகளைச் சோதனை செய்து, அங்கு முறையான ஆவணங்கள் இல்லாத 325 செல்போன்கள் மற்றும் 20 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இவை குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய செல்போன்களா என விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல்துறையின் இத்தகைய நடவடிக்கையால் திருட்டு செல்போன்கள் வாங்கி விற்கும் கடைக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும் என பொதுமக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மேலும், திருட்டு செல்போன்களை வாங்குவோர், விற்பனை செய்வோர் மற்றும் சாப்ட்வேர் பயன்படுத்தி செல்போன்களின் ஐஎம்இஐ எண் மற்றும் முக்கிய ஆவணங்களை மாற்றிக் கொடுக்கும் நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகரக் காவல்துறை அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x