

நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தில் கஜா புயலின் கோரத் தாண்டவத்தில், 200 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. 400 பைபர் படகுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சி செருதூர் மீனவ கிராமத்தில், 850 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவற்றில் 200 குடும்பங்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றன. செருதூர் மீனவ கிராமத்தில் 400 பைபர் படகுகளும், 12 விசைப்படகுகளும் உள்ளன. இவர்கள் அனைவருமே மீன்பிடித்தொழிலில் பிரதானமாக ஈடுபட்டு வருகின்றனர். மீனவ பெண்கள் மீன் விற்பனை, ஆடு வளர்ப்பது, 100 நாள் வேலை உறுதித்திட்டத்தில் வேலை பார்ப்பது ஆகிய வேலைகளைச் செய்து வருகின்றனர்.
கஜா புயலின் தாக்கத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. கடற்கரையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பைபர் படகுகள் புயல் காற்றால் 15 அடி தூரத்தில் உள்ள சீமைக்கருவைக் காட்டில் அடித்து செல்லப்பட்டுள்ளன. வலைகள் ஆங்காங்கே வீசப்பட்டுள்ளன. கணக்கெடுப்பு முழுமையாக முடியாததால், படகு, வலைகளை அகற்றாமல் அப்படியே போட்டு வைத்துள்ளனர்.
இது குறித்து மீனவ கிராம பஞ்சாயத்தார் கருணாமூர்த்தி கூறியதாவது:
‘‘கஜா புயலால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் கிராமத்தில் உள்ள 400 பைபர் படகுகளும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வலைகளும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, ஒரு பைபர் படகு மற்றும் வலைகளையும் சேர்த்து ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை நிவாரணம் கேட்டிருக்கிறோம். கொடுத்தால்தான் நாங்கள் வேறு படகை வாங்கி, மீன்பிடி தொழிலைச் செய்து சரிவை சரிசெய்ய முடியும்’’ என்றார்.
செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுந்தரி என்பவர் கூறியதாவது:
‘‘ஆண்கள் மீன்பிடி தொழிலுக்குச் சென்றாலும் ஒரு வருமானத்தை வைத்து குடும்பம் நடத்த முடியவில்லை. பெண்கள் மீன் விற்பது, 100 நாள் வேலை உறுதித்திட்டம் என பல வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். மேலும் ஒவ்வொரு வீட்டிலும் ஆடுகளை வளர்த்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் சுமார் 1,000 ஆடுகள் வரை இறந்துள்ளன. அவற்றுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும். மேலும் கிராமத்தில் உள்ள சிறுசிறு பெட்டிக் கடைகளும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
மீட்புப் பணிகள் மந்தம்
செருதூர் மீனவ கிராமத்தில் மீட்புப் பணிகள் மிகவும் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன. குடிசை வீடுகளுக்கு செல்லும் பாதைகள் சேறும் சகதியுமாக உள்ளன. தனியார் அமைப்புகள் உணவு, ரொட்டி, பிஸ்கட், தார்ப்பாய் ஆகியவற்றை வழங்குவது கிராம மக்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
நிவாரணப் பணிகள் குறித்து மாவட்ட மீன்வளத் துறை அலுவலர்களிடம் விசாரித்த போது, "மீனவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசுக்கு அறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. அரசு அறிவிக்கும் நிவாரணத்தை உடனடியாக வழங்க தயாராக இருக்கிறோம்" என்றனர்.