

சென்னை
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 60 ஆயிரம் நீர்நிலைகளைப் பாதுகாக்க மாவட்ட அளவில் குறைதீர் அலுவலர்களை நியமிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் நீதிமன் றத்தில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில், ‘‘சுதந்திரம் அடைவதற்கு முன்பாக தமிழகத்தில் சுமார் 60 ஆயிரம் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் இருந்ததாக ஆவணங் களில் உள்ளது.
இந்த நீர்நிலைகளை அடுத்த 500 ஆண்டுகளுக்கு பாதுகாக்கும் வண்ணமாக சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தகுந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இதில், சுமார் 39 ஆயிரத்து 202 நீர்நிலைகளை ஆங்கிலேய அரசு 1940-ம் ஆண்டு பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
அதிலிருந்து இந்த நீர்நிலைகள் பொதுப்பணித் துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எஞ்சியவை கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நீர்நிலைகளை முறை யாக பராமரிக்காத காரணத்தால் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் முழுமையாக கடலில் கலக்கிறது. இதனால் கோடைக்காலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதற்கு முன்பாக கிராம மக்களே பொதுநலன் கருதி ஏரி குளங்களை தூர்வாரி பராமரித்து தண்ணீரையும் சேமித்து வந்தனர். ஆனால் தற்போது பல நீர்நிலைகள் தனியார் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளின் ஆக்கிரமிப்பில் உள்ளன. கடந்த 2007-ல் தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாக்க பிரத்யேக சட்டம் கொண்டு வந்தும் எந்த முன்னேற் றமும் இல்லை.
எனவே ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலைகளைக் கண்டறியவும், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கவும் மாவட்ட அளவில் நீதித்துறை அதிகாரம் படைத்த குறைதீர் அலுவலர்களை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘இதுதொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு சம்பந்தப்பட்ட துறைச்செயலாளர்களுக்கு தனிப் பட்ட முறையில் நோட்டீஸ் அனுப்பவும் அறிவுறுத்தினர்.