Published : 26 Nov 2018 01:26 PM
Last Updated : 26 Nov 2018 01:26 PM

திமுக கூட்டணியில் இருக்கிறோமா என்பதை ஸ்டாலின் தான் கூற வேண்டும்: வைகோ

மதிமுகவும், விசிகவும் திமுக கூட்டணியில் இருக்கிறதா என்பதை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், மதிமுகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திமுக கூட்டணியில் இல்லை எனவும், காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே தற்போது திமுக கூட்டணியில் இருப்பதாகவும் கூறினார்.

மேலும், தோழமைக் கட்சிகள் வேறு, கூட்டணிக் கட்சிகள் வேறு என்று கூறிய துரைமுருகன், தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானால் மட்டுமே கூட்டணி கட்சியாக முடியும் எனவும் கூறியிருந்தார்.

மேலும், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் துரைமுருகன் இதனை கூறியிருந்தார் திமுக பொருளாளர் துரைமுருகன்

அவ்வாறு கூறியது மதிமுக, விசிக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த வைகோ, "மதிமுகவும் விசிகவும் உங்கள் கூட்டணியில் இல்லையா என்ற கேள்விக்கு அவர்கள் கூட்டணியில் இல்லை என்று துரைமுருகன் கூறியிருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டர்கள் இதனால் மன வருத்தத்தில் உள்ளனர்.

திமுக பொருளாளர் கருத்தை சொல்லியிருக்கிறார். திமுக தலைவர் தன்னுடைய கருத்து என்ன என்பதை சொல்லட்டும். இதனை திமுக தலைவர் ஸ்டாலின் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.

மதிமுகவினர் மிகவும் கட்டுக்கோப்பானாவர்கள். நான் தன்மானத்திற்காக வாழ்கின்றவன். என் தன்மானத்தைவிட இயக்கம் பெரிது. தமிழ்நாட்டின் நலன் பெரிது. ஈழ நலன் பெரிது.

இத்துடன் நான் இந்த விவகாரத்தை முடித்துக் கொள்கிறேன்" என வைகோ தெரிவித்தார்.   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x