Published : 16 Nov 2018 04:30 PM
Last Updated : 16 Nov 2018 04:30 PM

கஜா புயல்: மக்களின் துயர்துடையுங்கள்; தொண்டர்களுக்கு சீமான் வேண்டுகோள்

'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்க நாம் தமிழர கட்சி தொண்டர்கள் உதவிபுரிய வேண்டும் என, அக்கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கஜா' எனும் பெரும்புயல் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்டக் கடலோர மாவட்டங்களில் பெரும் பாதிப்பினையும், அளப்பரிய சேதத்தையும் ஏற்படுத்தி, அம்மாவட்டங்களையே நிலைகுலையச் செய்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கடலூரில் 'தானே' புயல் ஏற்படுத்திய இழப்பை ஒட்டிய இழப்பாகவே 'கஜா' புயலினால் ஏற்பட்ட அழிவுகள் இருக்கும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரும் பேரழிவுகளை அம்மாவட்டங்கள் சந்தித்து நிற்கின்றன.

மாவட்டங்கள் முழுவதும் ஏராளமான மரங்கள் சாய்ந்துவிட்டன. மின் கம்பங்கள், அலைபேசிக் கோபுரங்கள் என எதுவும் தப்பவில்லை. புயலின் கோரத்தாண்டவத்தில் வீடுகளும் இடிந்ததால் மக்கள் வாழ்விடமின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

வேதாரண்யம் பகுதிகளில் கடல்நீர் உட்புகுந்ததால், அந்நிலங்களில் இன்னும் பல ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியிருக்கிறது. ஆங்காங்கே உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் பெரும் மனவேதனையைத் தருகின்றன.

கடலோர மாவட்டங்களே உருக்குலைந்து போய் நிற்கிற இத்தகையத் துயர்மிகு சூழலில் அம்மாவட்ட மக்களுக்காகக் களத்தில் நிற்க வேண்டியதும், அப்பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உதவ வேண்டியதும் நமது தலையாயக் கடமை.

ஆகவே, கடலோர மாவட்ட 'நாம் தமிழர்' உறவுகளும், அருகாமை மாவட்டங்களைச் சேர்ந்த 'நாம் தமிழர்' உறவுகளும் உடனடியாக களத்திற்கு விரைந்து மக்களுக்கு உறுதுணையாக நின்று அவர்களின் துயர்துடைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

அம்மக்களுக்கு உணவும், தங்குமிடமும்தான் தற்போதைய நிலையில் மிகவும் அத்தியாவசியத் தேவையாக இருக்கின்றது. ஆகவே, மாந்தநேயப் பற்றாளர்களும், தன்னார்வலர்களும் உடனடியாக அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும், வெளிமாவட்ட உறவுகள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய களத்திற்குச் செல்லுமாறு அன்புக் கோரிக்கை விடுக்கிறேன்" என சீமான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x